கோடைகாலம் வந்து விட்டாலே இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிரமாண்டமான கிரிக்கெட் விருந்தே காத்திருக்கும். அதற்கு காரணம் இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட்தான். இந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி ஐபிஎல் மிகவும் கோலாகளமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. 


முதல் போட்டியில் சென்னை அணி தனது முழு பலத்தை வெளிக்காட்டி வெற்றியோடு தனது லீக் போட்டியைத் தொடங்கும் என ரசிகர்கள் நம்பிக்கொண்டு இருக்கும்போது, அவர்களது மனதில் கல்லைத் தூக்கிப்போடும் படியாக ஒரு செய்தி வந்துள்ளது. கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரராக சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ளது. இதற்கு காரணம் டெவான் கான்வேவிற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதுதான். இதனால் வரும் மே மாதம் வரை அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ளேயிங் லெவனில் கட்டாயம் இடம் பெறும் வீரராக டெவான் கான்வே இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெவான் கான்வேவின் காயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய போது டெவான் கான்வேவின் இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் டெவான் கான்வே டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும், சிகிச்சை மேற்கொள்ளாமல் விளையாடினால் காயத்தின் தன்மை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.


அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அதன் பின்னர் எட்டு வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது எனவும் தீவிரமான ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மே மாதம் முதல் வாரம் வரை கான்வேவால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலான போட்டிகளில் டெவான் கான்வேவால் விளையாட முடியாது. 


இது போன்ற நிலை ஏற்பட்டால் ஒரு ஐபிஎல் அணி காயத்தால் விலகி இருக்கும் வீரரை அணியில் இருந்து நீக்கி விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம்.  ஆனால், டெவான் கான்வே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருக்கும் நிலையில் அவரை சென்னை அணி நிர்வாகம் நீக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.