மும்பை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 193 ரன்களை விளாசியுள்ளது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பைக்கு ரோகித் சர்மாவும், இஷான்கிஷானும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். இதனால், மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென ஏறத் தொடங்கியது.


10வது ஓவர் வரை இருவரும் அதிரடியாக விளாசினர். அணியின் ஸ்கோர் 95 ரன்களை எட்டியபோது அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா அவுட்டானார். அவர் 36 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 48 ரன்கள் விளாசிய நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட்டானார். அவர் அவுட்டாகிய அடுத்த ஓவரிலே இஷான் கிஷானும் ஆட்டமிழந்தார்.




அவர் 34 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, டேனியல் சாம்சும், திலக் வர்மாவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடுவார்கள் என்று எதிர்பார்த்த மும்பை ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த தொடரில் மும்பையின் நட்சத்திரமாக ஜொலித்த திலக் வர்மா 8 ரன்ளில் உம்ரான் மாலிக் பந்தில் அவுட்டாகினார். அவர் அவுட்டாகிய சில நிமிடங்களில் டேனியல் சாம்சும் 15 ரன்களில் அவுட்டாகினார்.


இதனால், கடைசி 24 பந்தில் 54 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நெருக்கடி நிலைக்கு மும்பை ஆளாகியது. களத்தில் டிம் டேவிட் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் களமிறங்கினர். கடைசி 18 பந்தில் 45 ரன்கள் தேவைப்பட்டது. ட்ரிஸ்டனும் அவுட்டாகியதால் டிம் டேவிட் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் வீசிய 18வது ஓவரில் டிம் டேவிட் சிக்ஸரை விளாசினார். இதனால், மும்பை ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த நிலையில், அந்த ஓவரின் கடைசி பந்தில் டிம் டேவிட் தேவையில்லாமல் ரன் அவுட்டாகிய மும்பை ரசிகர்களை மீண்டும் சோகமடைய வைத்தார். அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் கிடைத்தது.




டிம் டேவிட் 18 பந்தில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 46 ரன்கள் விளாசி வெளியேறினார். அந்த ஓவரில் ரமன்தீப் பவுண்டரி விளாசியதால் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், மும்பை கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  


இந்த வெற்றியால் ஹைதராபாத் 2 புள்ளிகள் பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஹைதராபாத் வீரர் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நடராஜன் 4 ஓவர்கள் வீசி 60 ரன்களை வாரி வழங்கினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண