ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. புனேவில் நடைபெறும் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்கியது முதலே ராஜஸ்தான் அணியும், பெங்களூர் அணியும் மிகவும் பலமான அணிகளாக விளங்கி வருகிறது.
ராஜஸ்தான் அணியை பொறுத்தமட்டில் ஜோஸ் பட்லர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளார். அவர் இதுவரை 2 சதங்கள் அடித்து இந்த தொடருக்கான ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். அவருக்கு தேவ்தத் படிக்கல் தொடக்க வீரராக நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார். கடந்த போட்டியில் அவர் தனது பார்மை மீட்டார். கேப்டன் சஞ்சு சாம்சனும், ஹெட்மயரும் அதிரடியில் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகத்தில் அசத்த ட்ரென்ட் போல்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணா உள்ளனர். அவர்களுக்கு ஓபெட் மெக்காய் ஒத்துழைப்பு அளிக்க உள்ளார். ராஜஸ்தான் அணியின் பலமாக யுஸ்வேந்திர சாஹல் உள்ளார். அவர் இந்த தொடரில் சுழலில் அசத்தி வருகிறார். தன்னுடைய முந்தைய அணியான பெங்களூருக்கு எதிராக அவர் இன்று களமிறங்குகிறார். அவருடன் சுழலில் அசத்த அஸ்வினும் உள்ளார்.
பெங்களூர் அணியை பொறுத்தவரை இந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனாலும், கடந்த போட்டியில் 69 ரன்களில் சுருண்டது அந்த அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் அதில் இருந்து மீண்டு வந்து இந்த போட்டியில் பெங்களூர் அசத்தும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அந்த அணியின் கேப்டன் பாப் டுப்ளிசிஸ் தனது அதிரடியான பேட்டிங்கை இன்று அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அவருக்கு இளம் வீரர் அனுஜ் ராவத் நல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம். கடந்த இரண்டு போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகிய விராட்கோலி இந்த போட்டியில் ஒரு கம்பேக் கொடுப்பார் என்று நம்பலாம். அதிரடி வீரர் மேக்ஸ்வெல் நிச்சயம் இந்த போட்டியிலும் தனது அதிரடியை காட்டுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இளம் வீரர் பிரபுதேசாய் மற்றம் ஷாபாஸ் அகமது இருவரும் மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினேஷ் கார்த்திக் இந்த தொடரிலே மிகச்சிறந்த பினிஷராக அசத்தி வருகிறார்.
பெங்களூர் அணியின் பந்துவீச்சில் ஹர்ஷல் படேலும், ஹேசில்வுட்டும் நம்பிக்கை அளிக்கின்றனர். முகமது சிராஜ் கட்டுக்கோப்பாக பந்துவீசினால் எதிரணிக்கு நெருக்கடி ஏற்படும். ஹசரங்கா சுழலில் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளார். அவருடன் ஷாபாஸ் மற்றும் மேக்ஸ்வெல்லும் சுழலில் ஒத்துழைக்க உள்ளனர்.
புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ஆர்.சி.பி. 8 போட்டிகளில் ஆடி 5 வெற்றி 3 தோல்வியுடன் உள்ளது. புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் ஆடி 5 போட்டியில் வெற்றி 2 தோல்விகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ப்ளே ஆப் வாய்ப்புக்கு அடுத்தடுத்த போட்டிகளில் பிரம்மாண்ட வெற்றியை பெறவே இரு அணிகளும் விரும்பும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் 10 போட்டியில் ராஜஸ்தான் அணியும், 13 போட்டியில் பெங்களூர் அணியும் மோதியுள்ளன. 2 போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. கடைசியாக ஆடிய 5 போட்டியிலும் பெங்களூர் அணியே வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே விராட்கோலி அதிகபட்சமாக 584 ரன்களை விளாசியுள்ளார். ரஹானே ராஜஸ்தான் அணிக்காக 347 ரன்களை விளாசியுள்ளார். தனிநபர் அதிகபட்சமாக பெங்களூருக்காக படிக்கல் 101 ரன்களை விளாசியுள்ளார். அவர் தற்போது ராஜஸ்தானுக்காக ஆடுகிறார். அதிகபட்சமாக சாஹல் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் தற்போது ராஜஸ்தான் அணிக்காக ஆடுகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்