புனேவில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு சூர்யகுமார் யாதவின் அபார ஆட்டத்தால் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு டுப்ளிசியும் – ராவத்தும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். உனத்கட் வீசிய இரண்டாவது ஓவரில் ராவத் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். பின்னர், டுப்ளிசிசும், ராவத்தும் ஓரிரு ரன்களாக சேர்த்தனர்.




மும்பை வீரர்கள் தொடர்ந்து கட்டுக்கோப்பாக பந்துவீசியதால் பவர்ப்ளேவில் பெங்களூர் அணி ரன்களை சேர்க்கத் தடுமாறியது. பவர்ப்ளேவில் பெங்களூர் அணி 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், முருகன் அஸ்வினின் அடுத்த ஓவரில் ராவத் ஒரு சிக்ஸரையும், டுப்ளிசிஸ் ஒரு பவுண்டரியையும் விளாசினர். 8 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 50 ரன்களை எட்டியது. ஆனால், அடுத்த ஓவரிலே டுப்ளிசிஸ் உனத்கட் பந்தில் 24 பந்தில் 16 ரன்களில் அவுட்டானார்.


அடுத்து, ராவத்துடன் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி ஜோடி சேர்ந்தார். 10 ஓவர்கள் முடிவில் 62 ரன்களை பெங்களூர் அணி எடுத்தது. கோலியும், ராவத்தும் துரிதமாக ரன்களை சேர்த்தனர். குறிப்பாக, ராவத் அதிரடியாக ஆடினார். ராவத் தனது அதிரடியால் 38 பந்தில் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் தனது முதல் அரைசதத்தை விளாசினார். 15வது ஓவரில் விராட்கோலி அளித்த எளிதான கேட்ச்சை மும்பை வீரர் கோட்டை விட்டார். கடைசி 5 ஓவர்களில் பெங்களூர் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது.




இளம்வீரர் ராவத் தொடர்ந்து சிக்ஸர்களாக பறக்கவிட்டார். உனத்கட் பந்தில் மும்பை அணி ராவத்திற்கு எல்.பி.டபுள்யூக்கு எடுத்த ரிவியூவில் நாட் அவுட் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதே ஓவரிலே அதிரடியாக ஆடிய ராவத் ரன் அவுட்டானார். அவர் 47 பந்தில் 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கோலிக்கு ஒத்துழைப்பு அளிக்க தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார்.


இதனால், கடைசி 15 பந்துகளில் பெங்களூர் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா ஓவரில் மும்பை வீரர்களின் பீல்டிங் சொதப்பலால் தேவையில்லாமல் ரன்களை விட்டுக்கொடுத்தனர். பும்ரா வீசிய 18வது ஓவரின் கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் அற்புதமாக சிக்ஸருக்கு விரட்டினார். இதனால், கடைசி 12 பந்துகளுக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.




19வது ஓவரில் டேவல்ட் ப்ரேவிஸ் பந்தில் விராட்கோலிக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதனால், விராட்கோலி ரிவியூக்கு சென்றார். ரிவியூவில் பந்து பேட்டில் பட்டு கால்காப்பில் படுவது தெரிந்தது. இருந்தாலும் மூன்றாவது அம்பயர் விராட்கோலிக்கு அவுட் அளித்தார். கோலி 36 பந்தில் 5 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால், அடுத்து வந்த மேக்ஸ்வெல் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசி பெங்களூர் அணியை வெற்றி பெறவைத்தார், பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.


இந்த வெற்றி மூலம் பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண