மகாராஷ்ட்ராவில் உள்ள புனேவில் இன்று நடைபெறும் 18வது போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் டுப்ளிசிஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷானும் பொறுப்பான ஆட்டத்தை அளித்தனர். இதனால், பவர்ப்ளேவில் அந்த அணி 50 ரன்களை கடந்தது.
இதையடுத்து, ஹர்ஷல் படேல் வீசிய முதல் ஓவரிலே கேப்டன் ரோகித்சர்மா 15 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் அவரிடமே கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் டேவல்ட் ப்ரெவிசும் 8 ரன்களில் ஹசரங்கா பந்தில் அவுட்டானார்.
மும்பை அணியின் அதிரடி வீரரான இஷான்கிஷான் ஆகாஷ்தீப் வீசிய பந்தில் முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரி அடித்திருந்தார். இந்த நிலையில் அதே ஓவரில் மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா மேக்ஸ்வெல்லால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால், மும்பை அணி 10 ஓவர்களில் 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து, களமிறங்கிய அதிரடி மன்னன் கீரன் பொல்லார்ட் ஹசரங்கா பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால், 12 ஓவர்களில் மும்பை அணி 75 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராமன்தீப்சிங்கும் 6 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் தனி ஆளாக மும்பை அணிக்காக போராடினார். இதனால், அவர் 32 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். அவருக்கு உனத்கட் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். சிராஜ் வீசிய 19வது ஓவரில் மட்டும் 23 ரன்களை மும்பை அணியினர் விளாசினர்.
ஆனால், கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் சிறப்பாக வீசியதால் அந்த ஓவரில் 7 ரன் மட்டுமே வந்தது. கடைசி பந்தை சூர்யகுமார் யாதவ் சிக்ஸ் அடித்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணியின் முகமது சிராஜ் 4 ஓவர்களில் 51 ரன்களை வாரி வழங்கினார். ஹர்ஷல் படேல் சிறப்பாக வீசிய 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே வழங்கினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்