புனேவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் அதிரடியால் 20 ஓவர்களில் 173 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் டேவோன் கான்வேவும், ருதுராஜ் கெய்க்வாடும் நிதானமாகவும், ஏதுவான பந்துகளை அடித்தும் ஆடினார். இதனால், பவர்ப்ளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை எடுத்தது.


ஆனால், ஷபாஸ் அகமது வீசிய 7வது ஓவரில் ருதுராஜ் 28 பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அதிரடி வீரர் ராபின் உத்தப்பா மேக்ஸ்வெல் பந்தில் 1 ரன்னில் அவுட்டானர். பின்னர், கான்வேவுடன் அம்பத்தி ராயுடு ஜோடி சேர்ந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு மேக்ஸ்வெல் பந்தில் 10 ரன்களில் போல்டானார். இதனால், சென்னை அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.




இதையடுத்து, டேவோன் கான்வேவுடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார். தொடக்க வீரர் கான்வே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 37 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஹசரங்கா சுழலில் சிக்கி அவுட்டானார். அடுத்து முன்னாள் கேப்டன் ஜடேஜா களமிறங்கினார். அவர் 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹர்ஷல் படேல் பந்தில் அவுட்டாகினார்.


கடைசியில் சென்னை அணியின் வெற்றிக்கு 23 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் மொயின் அலியும், கேப்டன் தோனியும் இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 3 ஓவர்களில் சென்னை வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. மொயின் அலி 17வது ஓவரிலச் ஒரு சிக்ஸர் அடித்து அசத்திய நிலையில் அதே ஓவரில் அவுட்டாகினார். அவர் 27 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்தார்.




இதனால், தோனி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சென்னை ரசிகர்களின் கடைசி நம்பிக்கையான தோனி 2 ரன்களில் ஹேசில்வுட் பந்தில் அவுட்டானார். இதனால், சென்னையின் தோல்வி உறுதியானது. கடைசியில் ப்ரெட்ரியஸ் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து ஆறுதல் அளித்தாலும் அவரும் 13 ரன்னில் அவுட்டானார். கடைசியில் சென்னை 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், பெங்களூர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


பெங்களூர் வீரர் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இந்த வெற்றி மூலம் பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி 7வது தோல்வி அடைந்து 9வது இடத்திற்கு சென்றுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண