சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் புனேவில் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தனர். இதன்படி, பெங்களூர் அணியின் பேட்டிங்கை முன்னாள் கேப்டன் கோலியும், இந்நாள் கேப்டன் டுப்ளிசிசும் தொடங்கினர்.
இருவரும் அதிரடியாக ஆடியதால் பெங்களூர் அணியின் ஸ்கோர் விறுவிறுவென எகிறியது. பவர்ப்ளேவில் பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்களை எடுத்தது. அணியின் ஸ்கோர் 62 ரன்களை எட்டியபோது அதிரடியாக ஆடிய டுப்ளிசிஸ் 22 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலி பந்தில் அவுட்டானார். அவருக்கு அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 3 ரன்களில் ரன் அவுட்டானார்.
அடுத்த சில ஓவர்களில் விராட்கோலி 30 ரன்களில் மொயின் அலி பந்தில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு ஜோடி சேர்ந்த ரஜத் படிதாரும், மஹிபால் லோம்ராரும் அதிரடியாக ஆடினர், அதிரடி காட்டிய படிதார் 15 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21 ரன்களில் அவுட்டானார். ஆனாலும், மறுமுனையில் மஹிபால் அதிரடி காட்டினார்.
அதிரடி காட்டிய மஹிபால் லோம்ரார் 27 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 42 ரன்களுடன் அவுட்டானார். அந்த ஓவரில் மட்டும் சுழற்பந்துவீச்சாளர் தீக்ஷானா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் பந்தில் அவுட் வழங்கப்பட்டது. ஆனால், ரிவியூவில் நாட் அவுட் என்று தெரியவந்தது. அந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் 2 சிக்ஸர்கள் விளாசியதால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 173 ரன்களை குவித்தது. தினேஷ் கார்த்திக் 17 பந்தில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 26 ரன்களை எடுத்தார்.
சென்னை அணி சார்பில் மஹீஷ் தீக்ஷனா 4 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொயின் அலி 2விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்