நடுப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஆடி வருகிறது. சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டத்தை தொடங்கிய சென்னைக்கு ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இதையடுத்து, களமிறங்கிய மொயின் அலி ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் விளாசினார். குறிப்பாக, முன்னணி பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்டின் ஒரே ஓவரில் 1 சிக்ஸர், 5 பவுண்டரி விளாசி அசத்தினர். தொடர்ந்து அதிரடியாக ஆடிய மொயின் அலி 19 பந்துகளில் அரைசதம் விளாசினார். ஆனால், மற்றொரு தொடக்க வீரர் கான்வே 16 ரன்களில் அவுட்டாகினார்.
பவர்ப்ளேவில் 75 ரன்களை விளாசிய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஜெகதீஷன் 1 ரன்களிலும், அம்பத்தி ராயுடு 3 ரன்களிலும் ஆட்டமிழக்க சென்னை தடுமாறியது. இதனால், ஜெட் வேகத்தில் ரன்களை ஏற்றிய சென்னை அணி ஆமை வேகத்திற்கு மாறியது. கடைசி 4 ஓவர்களில் சென்னை அணி அதிரடி ஆட்டத்தை தொடங்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில், ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் மிகவும் கட்டுக்கோப்பாக வீசினர்.
சென்னை கேப்டன் தோனி சிக்ஸர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில், சாஹல் பந்தில் 26 ரன்களில் அவுட்டாகினார். அவர் ஆட்டமிழந்த பிறகு கடைசி ஓவரில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மொயின் அலி 93 ரன்களில் மெக்காய் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மொயின் அலி 57 பந்துகளில் 13 பவுண்டரி 3 சிக்ஸருடன் 93 ரன்களில் அவுட்டாகினார். இதனால், சென்னை அணி 20 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை அணி 200 ரன்கள் விளாசும் என்று எதிர்பார்த்த நிலையில் 150 ரன்கள் மட்டுமே சென்னை விளாசியது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடி வருகிறது. சாஹல், மெக்காய் தலா 2 ஓவர்களில் விளாசினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்