இந்திய கிரிக்கெட் நடைபெறும் மிகப் பெரிய லீக் போட்டி என்றால் அது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிதான். ஐபிஎல் இதுவரை 16 ஆண்டுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் தலா ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோப்பையை வென்றுள்ளது. ஹைதரபாத் மற்றும் கொல்கத்தா அணி தலா இரண்டு முறையும், ராஜஸ்தான் ராயல் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது. 


இதில் குஜராத் அணி கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி அதே ஆண்டு கோப்பையை வென்றது. 2023ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியது. 2022ஆம் ஆண்டு அறிமுகமான அணிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் ஒன்று. இந்த அணி கடந்த இரண்டு சீசன்களில் ப்ளே ஆஃப் வரை தகுதி பெற்றது. இந்த இரண்டு முறையும் லக்னோ அணிக்கு ஆலோசகராக கௌதம் கம்பீர் செயல்பட்டார். இவரது ஆலோசனையில் லக்னோ அணி சிறப்பாகவே செயல்பட்டது. இந்நிலையில் கம்பீர் நடந்து முடிந்த 2024ஆம் ஆண்டு ஏலத்திற்கு முன்னதாக கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக செயல்படுவதற்காக லக்னோ அணியில் இருந்து விடை பெற்றார். கொல்கத்தா அணிக்காக இதற்கு முன்னர் கேப்டனாக செயல்பட்டு 2012ஆம் ஆண்டும் 2014ஆம் ஆண்டும் கோப்பையை வென்றுள்ளது. 






இந்நிலையில் கம்பீர் கொல்கத்தா அணிக்கு சென்று விட்டதால், லக்னோ அணிக்கான ஆலோசகர் இன்னும் நியமிக்கப்படாமலே உள்ளது. இதனால் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி அதிக ரன்கள் குவித்தவருமான சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியானது. சுரேஷ் ரெய்னாவிற்கு சொந்த ஊர் என்பது லக்னோ. இதனால் லக்னோ அணியின் ஆலோசகர் பொறுப்பிற்கு சுரேஷ் ரெய்னா வரவுள்ளார் என்றெல்லாம் வெளியான தகவலுக்கு அடிப்படைக் காரணங்களாக கூறப்பட்டது. 




ஆனால் இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளப் பதிவு ஒன்றில், இது பொய்யான தகவல் எனக் கூறினார். இதற்கு சுரேஷ் ரெய்னா, ஏன் எப்போதும் உங்கள் செய்தி உண்மையாக இருக்கவேண்டும் என அவசியமில்லை என கூறியுள்ளார். தற்போது சுரேஷ் ரெய்னாவின் இந்த பதிவு வைரலாகி வருகின்றது. சுரேஷ் ரெய்னாவின் இந்த பதிவின் மூலம் அவர் லக்னோ அணிக்கு அலோசகராக பொறுப்பேற்கவுள்ளது உறுதியாகியுள்ளதால், சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  சுரேஷ் ரெய்னா கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெற்றார்.