ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.


ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17-ல் இன்று (மே 1) 50 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினார்கள். இவர்களது ஜோடி 25 ரன்களை எடுத்தது. அப்போது அபிஷேக் சர்மா தன்னுடைய விக்கெட்டை 12 ரன்களில் பறிகொடுத்தார். பின்னர் வந்த  அன்மோல்பிரீத் சிங் 5 ரன்களில் விக்கெட் ஆகி நடையைக் கட்டினார்.


202 ரன்கள் இலக்கு:


இவரைத் தொடர்ந்து களம் இறங்கினார் நிதிஷ் ரெட்டி. நிதனமாக ரன்களை சேர்த்து வந்த ஹைதராபாத் அணிக்கு இவர்களது ஜோடி வேகமாக ரன்களை சேர்த்துகொடுத்தது. இதனிடையே  அதிரடியாக விளையாடி வந்த ட்ராவிஸ் ஹெட் தன்னுடைய ஐ.பி.எல் அரைசதத்தை பதிவு செய்தார். மொத்தம் 44 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என 58 ரன்கள் எடுத்தார். அப்போது ஆவேஷ் கான் வீசிய பந்தில் கிளின் போல்ட் ஆகி நடையைக் கட்டினார் ஹெட். பின்னர் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த நிதிஷ் ரெட்டியுடன் ஹென்ரிச் கிளாசென் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மறுபுறம் 30 பந்துகளில் அரைசத்தை பதிவு செய்தார் நிதிஷ் ரெட்டி. அதேபோல் கிளாசென்னும் தன் பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி வரை களத்தில் நின்ற நிதிஷ் ரெட்டி 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசி 76 ரன்கள் குவித்தார். கிளாசென் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 42 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. 


ஜெய்ஸ்வால் - ரியான் பராக் அதிரடி ஆட்டம்:


அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களம் இறங்கினார்கள். இதில் கோல்டவுன் டக் அவுட் ஆகி வெளியேறினார் பட்லர். அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் புவனேஷ்வர் குமார். அப்போது ஜெய்ஸ்வால் உடன் ஜோடி சேர்ந்தார் ரியான் பராக். இவர்களது ஜோடி நிதனமான ஆட்டத்தை தொடங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தது. இதனிடையே யஜஸ்வி ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். மறுபுறம் ரியான் பராக் 31 பந்துகளில் அரைசத்தை பதிவு செய்தார்.


இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன் அணிகளுக்கு எதிராக அரைசத்தை பதிவு செய்த நிலையில் இன்றைய போட்டியிலும் அரைசதம் விளாசி அசத்தினார் ரியான் பராக். இவர்களது ஜோடியை பிரிக்க முடியாமல் திணறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அப்போது நடராஜன் வீசிய 14 ஓவரின் 3 வது பந்தில் ஜெய்ஸ்வால் போல்ட் ஆகி வெளியேறினார். அந்த வகையில் 40 பந்துகள் களத்தில் நின்ற அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 67 ரன்கள் குவித்தார். பின்னர் ஷிம்ரோன் ஹெட்மியர் களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி வந்த ரியான் பராக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய 16 வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


கடைசி பந்தில் நடந்த சம்பவம்:


அந்தவகையில் மொத்தம் 49 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி 77 ரன்கள் குவித்தார். ஹெட்மியருடன் ஜோடி சேர்ந்தார் ரோவ்மேன் பவல். முக்கியமான அந்த நேரத்தில் ஹெட்மியர் விக்கெட்டை எடுத்தார் நடராஜன். இது அவரது 100 வது டி 20 விக்கெட்டாகும். இதனிடையே 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழலில் இருக்க 19 வது ஓவரை வீச வந்தார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டன் பேட் கம்மின்ஸ். 19 வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார் ரோவ்மேன் பவுல்.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் த்ரில் வெற்றி:


புவனேஷ்குமார் வீசிய 20 வது ஓவரில் முதல் பந்தில் 1 ரன் இரண்டாவது பந்தில் இரண்டு ரன்கள், மூன்றாவது பந்தில் பவுண்டரி, நான்கு மற்றும் 5 வது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க எடுக்க கடைசி பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது அப்போது புவனேஷ்குமார் வீசிய பந்தில் போல்ட் ஆனார் பவுல். கடைசி வரை த்ரிலாக நடந்த இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.