RR Vs SRH, IPL Qualifier 2: ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


ஐபிஎல் தகுதிச்சுற்று போட்டி - 2: 


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் 70 லீக் சுற்று போட்டிகள், ஒரு தகுதிச்சுற்று மற்றும் எலிமினேட்டர் போட்டி ஆகியவற்றின் முடிவில், 7 அணிகள் வெளியேற 3 அணிகள் மட்டுமே தற்போது மீதமுள்ளன. அந்த வகையில் கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடப்போவது யார் என்பதை இறுதி செய்யும், இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதில் முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்ற பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.


ராஜஸ்தான் Vs ஐதராபாத் பலப்பரீட்சை:


இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.  இதில் வெற்றி பெறுவதோடு, இறுதிப்போட்டியிலும் வென்று, இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக இரு அணிகளும் தலா இரண்டு முறை, இறுதிப்போட்டியில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


ராஜஸ்தானின் பலம், பலவீனங்கள்:


ராஜஸ்தான் அணி நடப்பு தொடரின் முதல் பாதியில் அடுத்தடுத்து அதிரடியான வெற்றிகளை குவித்தது. ஆனால், இரண்டம் பாதியில் தொடர்ந்து தோல்விகளை தழுவியது. இருப்பினும் எலிமினேட்டர் போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹெட்மேயர் ஆகியோர் பேட்டிங்கில் அதிரடியான ஃபார்மில் உள்ளனர். ஜெய்ஷ்வால் மற்றும் ஜுரெல் ஆகியோரும் தங்களது பங்களிப்பை வழங்கினால், அணியின் பேட்டிங் மேலும் வலுவாகும். பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், அஷ்வின் மற்றும் சாஹல் ஆகியோரின் காம்போ, எதிரணிக்கு கடும் நெருக்கடியை தருகிறது. அவேஷ் கானும் நல்ல பங்களிப்பை வழங்கி வருகிறார். இதனால் ராஜஸ்தான் அணி சரியான கலவையிலான பிளேயிங் லெவனை கொண்டுள்ளது.


ஐதராபாத்தின் பலம், பலவீனங்கள்:


மறுமுனையில் ஐதாராபாத் அணி நடப்பு தொடரில் பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, திரிபாதி, கிளாசென் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் அதிரடியாக ரன்களை குவிக்கின்றனர். அதேநேரம், டார் ஆர்டட் பேட்டிங் சொதப்பினால், அணியின் மொத்த பேட்டிங் யூனிட்டும் தடுமாறுவதை பல போட்டிகளில் காண முடிந்தது. பேட்டிங் யூனிட்டிற்கு வலிமைக்கு நேர் எதிராக, ஐதராபாத்தின் பந்துவீச்சு மோசமாக உள்ளது. பேட் கம்மின்ஸ் - புவனேஷ்வர் குமார் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களே ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். தமிழக வீரர் நடராஜன் மட்டுமே கட்டுக்கோப்பாக பந்துவீசி வருகிறார். தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாததும், அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. எனவே இன்றைய போட்டியில் வெல்ல, ஐதராபாத் அணி பந்துவீச்சில் கூடுதல் செலுத்த வேண்டியுள்ளது.


ராஜஸ்தான் Vs ஐதராபாத் நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் ராஜாஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 10 முறையும், ராஜஸ்தான் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் அணி ஐதராபாத்திற்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக 220 ரன்களையும், குறைந்தபட்சமாக 102 ரன்களையும் சேர்த்துள்ளது. ஐதராபாத் அணி ராஜஸ்தானிற்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக 217 ரன்களையும், குறைந்தபட்சமாக 127 ரன்களையும் சேர்த்துள்ளது. இரு அணிகளும் பிளே-ஆஃப் வரலாற்றில் இதுவரை ஒருமுறை மட்டுமே மோதியுள்ளன. அதன்படி, 2013ம் ஆண்டு நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், ஐதராபாத் அணியை ராஜஸ்தான் அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.


சேப்பாக்கம் மைதானம் எப்படி?


சென்னை சேப்பாக்கம் மைதானம் இரட்டை தன்மை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கக் கூடிய இந்த மைதானம், நடப்பாண்டில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் அதிகப்படியான ரன்கள் குவிக்கப்பட வேண்டியுள்ளது. ஐதராபாத் வெற்றி பெற அஷ்வின் மற்றும் சாஹலின் சவாலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நடப்பு தொடரில் அந்த மைதானத்தில் நடைபெற்ற 7 போட்டிகளில், 5 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.


 உத்தேச அணி விவரங்கள்:


ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஸ்காந்த், டி நடராஜன்


ராஜஸ்தான்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்