ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கோலி - டூப்ளெசியின் அபார ஆட்டத்தால் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


மிரட்டலான துவக்கம்:


ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் கந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஐதராபாத் நிர்ணயித்த 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய, பெங்களூரு அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. விராட் கோலி - கேப்டன் டூப்ளெசிஸ் கூட்டணி ஐதராபாத்தின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இவர்களின் விக்கெட்டை எடுக்கப்பட்ட பல முயற்சிகளும் தோல்வியையே சந்தித்தன.


கோலி சதம்:


டூப்ளெசிஸ் 34 பந்துகளில் அரைசதம் விளாசி, நடப்பு தொடரில் 8வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் கோலி 35 பந்துகளில் 50 ரன்களை கடந்து, நடப்பு தொடரில் 7வது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கோலி 62 பந்துகளில், ஐபிஎல் தொடரில் தனது 6வது சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். அவரை தொடர்ந்து கேப்டன் டூப்ளெசியும் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். 


பெங்களூரு அபார வெற்றி:


இதன் மூலம் 19.2 ஓவரிலேயே இலக்கை எட்டி பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 7வது வெற்றி இதுவாகும்.


 


சென்னைக்கு நெருக்கடி:


இன்றைய வெற்றியின் மூலம் மும்பையை பின்னுக்குத் தள்ளி, பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை அணி, பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேற டெல்லி அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை அந்த போட்டியில் தோல்வியுற்றால், லக்னோ, மும்பை மற்றும் பெங்களூரு அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுகளுக்காக சென்னை அணி காத்திருக்க வேண்டி இருக்கும்.


முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:


டாஸ் வென்ற பெங்களூரு:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில், டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதின.  ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 


ஆரம்பமே சொதப்பல்:


ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்று ராகுல் திரிபாதி ஆகிய இருவருமே ரன் சேர்க்க திணறினர். இதனால், பிரேஸ்வெல் வீசிய போட்டியின் 5வது ஓவரில், அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், திரிபாதி 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 28 ரன்களை சேர்ப்பதற்குள் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.


பொறுப்பான கூட்டணி:


3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் மார்க்ரம் மற்றும் கிளாசென் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக கிளாசென் ஆரம்பம் முதலே அதிரடியாக பவுண்டரிகளையும் , சிக்சர்களையும் விளாசினார். இதனால்,  24 பந்துகளிலேயே நடப்பு தொடரில் தனது 3வது அரைசதத்தை பதிவு செய்தார். இதனிடையே நிதானமாக விளையாடி வந்த மார்க்ரம், 18 ரன்களை சேர்த்து இருந்தபோது ஆட்டமிழந்தார். 


இறுதியில் அதிரடி:


5வது விக்கெட்டிற்கு கிளாசெனுடன் ஜோடி சேர்ந்த, ஹாரி ப்ரூக் தனது பங்கிற்கு அதிரடி காட்டினார். இருவரும் சேர்ந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதனால், ஐதராபாத்தின் ரன் கிடுகிடுவென உயர்ந்தது. தொடர்ந்து, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளாசென், 49 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். பின்பு, 104 ரன்கள் சேர்த்து இருந்தபோது தனது விக்கெட்டை இழந்தார். 


பெங்களூரு அணிக்கு இலக்கு:


இதனால், 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை சேர்த்தது. இந்த இலக்கை பெங்களூரு அணி 19.2 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது.