ஐபிஎல் தொடரில் இன்று சன்ரைசர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த ஐதரபாத் அணி மிகப்பெரிய ரன்மழை பொழியும் என்று காத்திருந்த சன்ரைசர்ஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

விக்கெட் வேட்டை நடத்திய டெல்லி:

ரன் வேட்டை நடத்த வேண்டும் என்று எண்ணத்தோடு களமிறங்கிய அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் ரெட்டியை டெல்லி அணியினர் காலி செய்தனர். குறிப்பாக இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டியை டெல்லியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒற்றை ரன்னில் காலி செய்தார். விக்கெட் விழுந்தாலும் மட்டையை வீச வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிய சன்ரைசர்ஸ் அணிக்கு அதுவே பின்னடைவாக அமைந்தது. சன்ரைசர்ஸ் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டை ஸ்டார்க் 22 ரன்னில் காலி செய்தார். அவர் 12 பந்துகளில் 4 பவுண்டரியுடன் வெளியேறினார். 

அசத்திய அனிகெத்:

அடுத்து ஜோடி சேர்ந்த அனிகெத் வர்மா - கிளாசென் ஜோடி சிறப்பாக ஆடியது. இருவரும் அடித்து ஆடினர். இதனால், சரிந்த ஐதரபாத்தின் ரன் வேட்டை மீண்டும் எகிறியது. இருவரும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசியதால் 10 ஓவர்களுக்கு முன்பாகவே ஐதரபாத் 100 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய இந்த ஜோடியை மோகித் சர்மா பிரித்தார். அவரது பந்தில் அதிரடி காட்டிக் கொண்டிருந்த கிளாசென் சிக்ஸர் அடிக்க முயற்சித்து 19 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் காலியானார். 

அவர் ஆட்டமிழந்த பிறகு வந்த அபினவ் மனோகர் 4 ரன்னிலும், கேப்டன் கம்மின்ஸ் 2 ரன்னிலும் அவுட்டானார்கள். ஆனாலும், மறுமுனையில் இருந்த அனிகெத் வர்மா தன்னுடைய வேலையை கனகச்சிதமாக செய்தார். அக்ஷர் படேல், மோகித் சர்மா, குல்தீப் யாதவ், விப்ராஜ் என யார்வீசினாலும் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். 

164 ரன்கள் டார்கெட்:

கடைசியில் ஜேக் ப்ரெசர் பிடித்த அபாரமான கேட்ச்சால் அவர் அவுட்டானார். அவர் சிக்ஸருக்கு அனுப்பிய பந்தை தாவிப்பிடித்து ஜேக் அவரை அவுட்டாக்கினார். இதனால், அனிகெத் வர்மா 41 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 74 ரன்களுடன் அவுட்டானார். கடைசியில் 18.4 ஓவர்களில் 163 ரன்களில் சன்ரைசர்ஸ் ஆல் அவுட்டானது. 

டெல்லி அணிக்காக சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 3.4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய போட்டியில் டெல்லி அணி மிகவும் அபாரமாக பந்துவீச்சு மற்றும் பவுலிங் செய்தனர். இதனால், 200 ரன்களை எட்ட வேண்டிய சன்ரைசர்ஸ்  அணியை அவர்கள் கட்டுப்படுத்தினர்.