ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை விளாசிய ஐதராபாத் வீரர் ஹாரி ப்ரூக்ஸ், பல்வேறு சாதனைகளை தகர்த்துள்ளார். சக இங்கிலாந்து வீரரான ஜானி பார்ஸ்டோவின் நான்கு ஆண்டுகால சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார்.


ப்ரூக்ஸ் அதிரடி சதம்:


ஐதராபாத்தை சேர்ந்த இளம் வீரரான ஹாரி ப்ரூக்ஸ், நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் முக்கியமானவர் ஆவார். ஆனால், அவர் விளையாடிய முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்து சொதப்பி 29 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக பிளாட் டிராக் அதாவது பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் மட்டுமே அவரால் சோபிக்க முடியும் எனவும் பேசப்பட்டது. இதனை நிரூபிக்கும் வகையில் தான், பேட்டிங்கிற்கு சாதகமான ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், ஹாரி ப்ரூக்ஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இந்த போட்டியில் வெறும் 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 100 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு ப்ரூக்ஸ் பதிலளித்ததை,  அவரது காதலி மைதானத்தில் நேரடியாக கண்டு ரசித்தார். இந்த போட்டியில் ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



ப்ரூக்ஸ் நெகிழ்ச்சி:


தனது சதம் குறித்து பேசிய ப்ரூக்ஸ் ”தொடக்க போட்டிகளில் சரியாக விளையாடாதது என் மீது எனக்கே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், புத்துணர்ச்சியுடன் விளையாட நினைத்தேன். இன்றைய போட்டியில் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய காதலி இங்கே இருக்கிறார்.  ஆனால், என் குடும்பத்தினர் அனைவரும் ஓய்வுக்காக வெளியேறிவிட்டனர்.  அவர்கள் அனைவரும்  எனது சதத்தை நினைத்து மிகவும் மகிழ்சியாக இருப்பார்கள் என நம்புவதாக” குறிப்பிட்டார்.


ப்ரூக்ஸ் படைத்த சாதனைகள்:


ஐதராபாத் அணிக்காக சதமடித்த வார்னர் மற்றும் ஜானி பார்ஸ்டோ ஆகிய வீரர்களின் பட்டியலில் ப்ரூக்ஸ் இணந்தார். அதோடு, ஐதராபாத் அணிக்காக சதம் விளாசிய இளம் வீரர் என்ற, சக இங்கிலாந்து வீரரான பார்ஸ்டோவின் சாதனையையும் ப்ரூக்ஸ் தனதாக்கினார். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு தனது 29வது வயதில் பார்ஸ்டோ சதமடித்தார். ஆனால், ப்ரூக்ஸ் தனது 24வது வயதிலேயே ஐதராபாத் அணிக்காக சதமடித்துள்ளார்.


பீட்டர்சன், ஸ்டோக்ஸ், பட்லர், பார்ஸ்டோ வரிசையில் ஐபிஎல் தொடரில் சதமடித்த ஐந்தாவது இங்கிலாந்து வீரர் ப்ரூக்ஸ். அதோடு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக (இன்னிங்ஸ் அடிப்படையில்) சதமடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மெக்கல்லம், மைக் ஹஸ்ஸி மற்றும் பால் வல்தாட்டி ஆகியோர் தனது முதல் இன்னிங்ஸிலும், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் பார்ஸ்டோ ஆகியோர் தங்களது மூன்றாவது இன்னிங்ஸிலும் சதமடிக்க, ப்ரூக்ஸ் தனது நான்காவது இன்னிங்ஸில் சதமடித்துள்ளார்.


பிஎஸ்எல், ஐபிஎல்லில் சதம்:


பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் ஆகிய இரண்டு தொடர்களிலும் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ப்ரூக்ஸ் பெற்றுள்ளார். கடந்த பிஎஸ்எல் தொடரில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடிய ப்ரூக்ஸ் இஸ்லாமாபாத் அணிக்கு எதிராக சதம் அடித்ததோடு, தனது அணி முதல் கோப்பையை கைப்பற்றவும் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.