ஐபிஎல் 2023 சீசன் பாதிகட்டத்தை தாண்டி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த முறை கோப்பை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி இம்முறையும் ஆதிக்கம் செலுத்துகிறது. டாப் 4 இல் ராஜஸ்தான், லக்னோ, சென்னை அணிகள் உள்ளன. இம்முறை அதிசயிக்கும் வகையில் பல விஷயங்கள் நடந்துள்ளன. ரிங்கு சிங் தொடங்கி லக்னோ அணியின் 257 வரை ஐபிஎல் ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி சென்றுகொண்டிருக்கிறது.
அதிக 200+ ஸ்கோர்கள்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 200க்கு மேல் எடுக்கப்படும் ஸ்கோர்கள் கணிசமான அளவு உயர்ந்துள்ளதுதான். இத்தனை ஆண்டுகளாக நடந்து வரும் ஐபிஎல் வரலாற்றில் 200 என்பது இமாலய ஸ்கோராக கருதப்படும், அதனை துரத்தி வேற்றியடைவது கடினமாக இருக்கும். ஆனால் இந்த தொடரில் 200 ரன்களை அசால்ட்டாக எடுக்கும் அணிகள் அதனை டிஃபண்ட் செய்யவும் படாதபாடு படுகின்றனர், குஜராத், பெங்களூர் போன்ற அணிகளே 200 ரன்கள் அடித்து தோல்வியையும் சந்தித்துள்ளனர்.
இப்போதே முந்தைய சாதனையை கடந்துவிட்ட சீசன்
ஐபிஎல் 2023 இல் 38 போட்டிகள் தற்போது வரை நடைபெற்றுள்ள நிலையில், இதுவரை 200க்கு மேற்பட்ட ஸ்கோர் 20 முறை குவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் குவிக்கப்பட்ட 200+ ரன்களின் என்ணிக்கையை இப்போதே தாண்டிவிட்டது. இன்னும் பல போட்டிகள் நடைபெற உள்ள என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 சீசனில் மோதமாகவே 18 முறைதான் 200+ ஸ்கோர் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இம்முறை 40-ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோரிங் ரேட்டும் அதிகம்
அதுமட்டுமின்றி ஐபிஎல் 2023 இல் ஸ்கோரிங் ரேட், அதாவது ஒட்டுமொத்த ரன் ரேட் தற்போது 8.91 ஆக உள்ளது. இதுவே ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனின் அதிகபட்சம். 2018 இல் 8.64 மற்றும் 2022 இல் 8.54 என்பதே இதற்கு பின் உள்ள சாதனைகள். மேலும், ஒரே போட்டியில் இரு அணிகளும் 200+ ரன்கள் குவித்த நிகழ்வுகளும் இம்முறை அதிகம். இதுவரை மட்டுமே 7 முறை அவ்வாறு நடந்துள்ளது.
இதற்கு முன் ஐந்து முறை ஒரு தொடரில் நடந்ததே அதிகபட்சமாக இருந்தது. அதுவும் கடந்த ஆண்டுதான் நிகழ்த்தப்பட்டது. இந்த பெரும் மாற்றங்களுக்கு இம்பாக்ட் பிளேயர் விதி காரணமாக இருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். பேட்டிங் டெப்த் அதிகரித்துவிட்டதாலும், சில அணிகள் நம்பர் 9 வரை பேட்டிங் ஆடும் வீரர்களை வைத்திருப்பதும் காரணம் என்று கூறப்படுகிறது.
அனில் கும்ப்ளே கருத்து
இதுகுறித்து பேசிய முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே, "என்னைப் பொறுத்தவரை, கூடுதல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சாளர் இருப்பதால்தான் இந்த விளைவு. அணியில் ஒரு சரியான ஆல்-ரவுண்டர் இல்லையென்றாலும், இதன் மூலம் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் கொண்டு விளையாடுவது போன்றதுதான். முன்னதாக, பெரும்பாலான அணிகளில் ஒன்று அல்லது ஒன்றரை (ஒரு சுமாரான ஆல்ரவுண்டர்) ஆல்ரவுண்டர்கள் இருப்பார்கள்.
அவர்களை பயன்படுத்துவதில் பல்வேறு வகையான சவால்கள் இருந்தன. ஆனால் இந்த சீசனில், ஒவ்வொரு அணியும் இம்பாக்ட் வீரரைப் பயன்படுத்தி அந்த இடைவெளியை நிரப்ப முடிகிறது. சில அணிகள் இம்பாக்ட் பிளேயரை மிகவும் திறம்பட பயன்படுத்துகின்றன. இறுதியாக இந்த சீசனில் பல 200+ ஸ்கோர்கள் வருவதற்கு காரணம், இம்பாக்ட் பிளேயர் விதிதான் என்று உறுதியாக கூறலாம்," என்றார்.