ஐபிஎல் 2023 தொடரில் நேற்று மாலை ஈடன் கார்டனில் நடந்த மோதலில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை தோற்கடித்ததற்கு முக்கிய காரணமாக விஜய் ஷங்கர் அதிரடி இருந்தது. 200க்கு மேல் ஸ்ட்ரைக்-ரேட்டில் பேட்டிங் செய்த விஜய் ஷங்கர் 24 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார்.


விஜய் ஷங்கர் அதிரடி


டேவிட் மில்லருடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில், குஜராத் அணி 180 ரன்களை 13 பந்துகள் மீதம் வைத்து நிறைவு செய்தது. மில்லர் வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனை நாள் எங்கிருந்தார் என்றே தெரியாத நிலையில் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் நன்றாக செயல்பட்டு அணிக்கு தேவையான ரன்களை குவித்து வருகிறார். சஹா, மோஹித் ஷர்மா, சாய் சுதர்சன் என்று பொதுவாகவே குஜராத் அணிக்கு யார் சென்றாலும் அவர்கள் நன்றாக விளையாடுவது ஒரு வழக்கமாகியிருந்தாலும், விஜய் ஷங்கர் இந்த ஆண்டு நன்றாக ஆடுவதை பலர் ட்ரோல் செய்கிறார்கள். அதற்கு காரணம் இந்த ஆண்டு உலகக்கோப்பை ஆண்டு என்பதுதான்.










3D பிளேயர் வரலாறு


2019 உலகக் கோப்பை அணியில் விஜய் ஷங்கரின் தேர்வில் பல சர்ச்சைகள் எழுந்தன. யுவராஜ் சிங்கிற்கு பிறகு நம்பர் 4 இடத்தில் ஆட ஒரு சிறந்த வீரரை தேட நிர்பந்திக்கப்பட்டது தேர்வுக்குழு. அப்போது அந்த இடத்திற்கான மோதலில் அம்பத்தி ராயுடு, சஞ்சு சாம்சன் போன்றவர்கள் இருந்தார்கள். இருப்பினும் தேர்வுக்குழு விஜய் சங்கரை தேர்வு செய்தனர், அதற்கு காரணம் அவருடைய மூன்று டைமன்ஷன் திறன் என்று கூறினார்கள். அதாவது பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றும் அவரால் பலமாகும் என்று குறிப்பிட்டனர். இதனால் விரக்தி அடைந்த மூத்த வீரர் அம்பத்தி ராயுடு ட்விட்டரில் இந்த உலகக்கோப்பையைக் காண 3டி க்ளாசஸ் வாங்கப்போகிறேன் என்று பதிவிட்டு கலாய்த்தார்.  


தொடர்புடைய செய்திகள்: CSK vs PBKS IPL 2023: தல தோனியின் மந்திரத்தின் முன் எடுபடுமா பஞ்சாப் வியூகம்..? யாருக்கு சாதகம்? - ஒரு பார்வை


நம்பர் 4இல் மீண்டும் வெற்றிடம்


டிசம்பர் 30 ஆம் தேதி, துரதிர்ஷ்டவசமான சாலை விபத்துக்குள் ஆன, ரிஷப் பண்ட் மற்றும் காயம் காரணமாக அறுவை சிகிச்சைக்குள்ளாகி இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் காரணமாக மீண்டும் அந்த இடத்திற்கான வெற்றிடம் உருவாகியுள்ளது. உள்ளபடியே மீண்டும் இது ஒரு உலகக்கோப்பை வருடம் என்பதால் உடனடியாக அந்த இடத்தை நிரப்ப வேண்டிய நிலையில் இந்திய அணி தேர்வுக்குழு உள்ளது. இந்தநேரத்தில் விஜய் ஷங்கர் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி வருவது மீண்டும் அந்த இடத்தை பிடிக்கத்தான் என்று பலர் மீம்கள் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். 














ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்


இந்த போட்டியில் மட்டுமல்ல, விஜய் ஷங்கர் கொல்கத்தா அணியுடனான முந்தைய போட்டியிலும் இதேபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் அந்த போட்டியில் ரிங்கு சிங் மீது லைம்லைட் திரும்பியதால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த போட்டியில் விஜய் ஷங்கர் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியிலும் அதே போல அதிரடி காண்பித்த அவர் அணியை எளிதாக வெற்றிக்கு இழுத்து சென்றார். அதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கடைசி மூன்று ஓவர்களில் ரன்கள் குறைவாகவே தேவைப்பட்ட நிலையிலும் விஜய் ஷங்கர் அதிரடியை நிறுத்தாமல் தொடர்ந்து சிக்ஸர்களை பறக்கவிட்டுக்கொண்டிருந்தார். ரன் ரேட்டை உயர்த்தும் நோக்காக இருந்தாலும் அதையும் தன்னை நிரூபிப்பதற்காகத்தான் செய்கிறார் என்று கருதுகின்றனர் நெட்டிசன்கள்.