சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகதான் நேற்று அவரால் ஓட முடியவில்லை என தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். 


நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சொந்த மைதானமான சேப்பாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 176 ரன்களை சென்னை அணி வெற்றிக்காக துரத்தியபோது தோனி சில இடங்களில் ஓட முடியாமல் சிரமப்பட்டார். இதற்கு, இந்த போட்டிக்கு முன்னதாக உள்- குழு பயிற்சி ஆட்டத்தின்போது தோனிக்கு ஏற்பட்ட காயமே என்று கூறப்படுகிறது. 


இந்தநிலையில் இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேசினார். அப்போது பேசிய அவர், “ எம்.எஸ். தோனி தனது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அவரால் நேற்றைய போட்டியில் சரியாக ஓட முடியாமல் தவித்தது நம் அனைவராலும் பார்க்க முடிந்தது. அந்த காயம் அவருக்கு தடையாக இருந்தது. அதனையும் அவர் பெரிதாக எடுத்துகொள்ளாமல் வெற்றிக்காக முயற்சித்தார்.” என்றார். 


ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, எம்.எஸ். தோனி பயிற்சியை தொடங்கிவிட்டார். அவர் அப்போதிலிருந்தே ஃபிட்டாகதான் இருந்தார். ராஞ்சியில் பயிற்சியை தொடங்கிய அவர், தொடர்ந்து சென்னையிலும் தனது ஃபிட்டை தொடர்ந்தார். மீண்டும் தனது பார்மை கொண்டு வந்து நன்றாக விளையாட தொடங்கினார். உடற்தகுதி விஷயத்தில் அவர் தன்னை நிர்வகிப்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் எப்போதும் உடற்தகுதி விஷயத்தில் தன்னை நிலைப்படுத்துவார். தொடர்ந்து விளையாடுவார் என்றும்  தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மேலும் கூறினார். 


நேற்றைய போட்டியில் முழங்கால் பிரச்சனையால் தோனி அவதிபட்ட போதிலும், சிறப்பாகவே செயல்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 17 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். அதுபோக, இந்த சீசனில் தோனி மூன்று இன்னிங்ஸ்களில் 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 215 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன்  58 ரன்களை எடுத்துள்ளார். மேலும், வலை பயிற்சியின்போது தோனி பல்வேறு பந்துகளை எல்லைக்கு அனுப்பும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. 






சிசண்டா மகாலா காயம்: 


தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் சிசண்டா மகாலா  ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார். நேற்று கேட்ச் பிடிக்கும்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு அவர் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. 


காயத்தில் தத்தளிக்கும் சிஎஸ்கே: 


ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் காயம் காரணமாக முழு தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாகதான் சிசண்டா மகாலா இணைந்தார். தொடர்ந்து,  இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். 


இலங்கை அணியை சேர்ந்த சென்னை வந்த மதீஷா பத்திரனா , சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள ஒரே ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர். 


என்ன ஆனார் தீபக் சாஹர்..? 


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் முதல் ஓவரில் தீபக் சாஹர் பந்து வீசியபோது தசை பிடிப்பு ஏற்பட்டது. அவரும் தனது காயத்தில் இருந்து மீண்டு வர இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.