ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்ய  முடிவு செய்துள்ளது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 


ஐதராபாத் - ராஜஸ்தான் மோதல்: 


ஐபிஎல் தொடரின் 52வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. ஜெய்பூரில் உள்ள சவாய் மன்சிங் இந்தூர் மைதானத்தில் நடைபெறும் போட்டியில்,  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.  நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் ஐதராபாத் அணி களமிறங்குகிறது. அதேநேரம், கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள ராஜஸ்தான், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டி வருகிறது. இந்த போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.


புள்ளிப்பட்டியல் விவரம்:


நடப்பு ஐபிஎல் தொடரில்  ராஜஸ்தான் ராயல்ஸ் பத்து போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில்  நான்காவது இடத்தில் உள்ளது. கடைசியாக குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வியுற்ற நிலையில், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணி முனைப்பு காட்டி வருகிறது. இதனிடையே, சன்ரைசர்ஸ் ஐதராபாத் நடப்பு  சீசனில் ஒன்பது போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்ற ஐதராபாத் அணி, இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது.


நேருக்கு நேர்


இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 9 முறையும், ஹைதராபாத் அணி 8 முறையும் வெற்றி கண்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கடைசியாக நடந்த 5 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெறும் ஒன்றில் மட்டுமே ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.


மைதானம் எப்படி?


ஜெய்ப்பூரில் நடந்த கடைசி மூன்று போட்டிகளின் முதல் இன்னிங்ஸ் 118, 202 மற்றும் 154 என்ற முறையே அமைந்தது. அதனால், எதற்கு சாதகமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. முந்தைய போட்டியில் வீழ்ந்த 11 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகளை எடுத்தனர். எனவே, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம். இந்த சூழலில் தான் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.