துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்ற பெங்களூர் – டெல்லி அணி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆட்டத்தை தொடங்கிய பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் சிறப்பான தொடக்கத்தை டெல்லிக்கு அளித்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 88 ரன்கள் குவித்தனர்.
தவான் 43 ரன்னிலும், ப்ரித்விஷா 48 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 10 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 10 ஓவர்களில் 90 ரன்கள் வரை எடுத்திருந்த டெல்லி 10 முதல் 15 ஓவர்கள் இடையில் போராடியது. கடைசி கட்டத்தில் ஹெட்மயர் சற்று அதிரடியாக ஆடி 22 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து 29 ரன்கள் எடுத்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் அணியில் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாஹல், ஹர்ஷல் படேல், கிறிஸ்டின் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. விராட்கோலியும், தேவ்தத் படிக்கல்லும் ஆட்டத்தை தொடங்கினர். ஆனால், டெல்லியின் நட்சத்திர பந்துவீச்சாளர் நோர்ட்ஜே முதல் ஓவரிலே தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் கேப்டன் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் விழுந்ததால் பெங்களூர் அணி அதிர்ச்சி அடைந்தது.
இதையடுத்து, பெங்களூர் அணியின் வளரும் நட்சத்திரம் கே.எஸ்.பரத்- ஏபி டிவிலியர்சுடன் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல ஆடினர். வழக்கமாக அதிரடியாக ஆடும் டிவிலியர்ஸ் இந்த போட்டியில் மிகவும் நிதானமாக ஆடினார். அவர் 26 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து அக்ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, பரத்துடன் கிளென் மேக்ஸ்வேலும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர்.
கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து அரைசதம் அடித்த கிளென் மேக்ஸ்வெல் இந்த போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் தொடக்கத்தில் நிதானமாக ஆடிய பரத் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடத் தொடங்கினார். பெங்களூர் வெற்றிக்கு கடைசி 6 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது.
ஆவேஷ்கான் வீசிய கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்தார். பின்னர், ஸ்ட்ரைக்கை பரத்திற்கு அளித்தார். கடைசி ஒரு பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை ஆவேஷ்கான் வைடாக வீசியதால் வெற்றிக்கு ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ்கான் புல்டாசாக வீசிய அந்த பந்தை கே.எஸ். பரத் சிக்ஸராக மைதானத்தை விட்டு வெளியே அனுப்பினார். இதனால், பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. விராட்கோலி, டிவிலியர்ஸ், மேக்ஸ்வேல் ஆகியோருக்கு மத்தியில் புதிய நட்சத்திரமாக அந்த அணிக்கு கே.எஸ். பரத் கிடைத்துள்ளார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்தில் 3 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பெங்களூர் அணி வரும் 11-ந் தேதி ஷார்ஜாவில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் மோத உள்ளது.
.