கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பாக,. இந்திய கிரிக்கெட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா என்ன வேலை பார்த்தார் என்பது தொடர்பான தகவலை முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா பகிர்ந்துள்ளார்.


”மை டைம் வித் ரோகித்”


இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதுதொடர்பாகவும் அதை சார்ந்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்,   ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகும் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தொடர்பான ”மை டைம் வித் ரோகித்” எனும் நிகழ்ச்சியில்,  அந்த அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா பங்கேற்றார். அப்போது ரோகித் சர்மா உடனான தனது நட்பு மற்றும் கிரிக்கெட் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்தார்.


ரோகித் உடனான நட்பு:


நிகழ்ச்சியில் பேசிய ஓஜா “ 15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கிரிக்கெட் முகாமில் நான் ரோஹித்தை முதன்முதலில் சந்தித்தேன். ​​எல்லோரும் அவரை மிகவும் சிறப்பான வீரர் என்று சொன்னார்கள். அங்கு, நான் ரோகித்திற்கு எதிராக விளையாடி அவரது விக்கெட்டை வீழ்த்தினேன். ரோஹித் ஒரு வழக்கமான மும்பை சிறுவனை போன்று, அதிகம் பேசவில்லை, ஆனால் ஆக்ரோஷமாக  விளையாடினார். உண்மையில், நாங்கள் ஒருவரையொருவர் அறியாதபோது அவர் ஏன் என்னிடம் இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அதன் பிறகு எங்கள் இடையேயான நட்பு வளரத் தொடங்கியது” என்றார்.


பால் பாக்கெட் போட்ட ரோகித் சர்மா:


தொடர்ந்து “ரோகித் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். கிரிக்கெட் கிட்களுக்கான பணத்தை அவர் எவ்வாறு  சம்பாதித்தார் என்பது குறித்து விவாதித்தபோது ரோகித் உணர்ச்சிவசப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. உண்மையில், அவர் வீடு வீடாக சென்று பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்தார். அதன் மூலம் கிடைத்த வருவாய் கொண்டு தான் அவர் தனக்கான கிரிக்கெட் கிட்டை வாங்கினார். இப்போது நான் அவரைப் பார்க்கும்போது, ​​​​எங்கள் பயணம் எப்படி தொடங்கியது, நாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை கருதி மிகவும் பெருமைப்படுகிறேன்” என ஓஜா குறிப்பிட்டார்.


ஆலோசனை வழங்கிய ரோகித்


ஐபிஎல் குறித்து பேசியபோது “ 2008 ஆம் ஆண்டில், டி20 கிரிக்கெட் பலருக்கு அந்நியமாக இருந்தபோது, ​​நாங்கள் ஐபிஎல்லில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினோம். அந்த நேரத்தில், டி-20 போட்டிகளுக்கு எப்படி திட்டமிடலாம் மற்றும் டி-20 கிரிக்கெட்டில் கூட ஒரு ஆக்ரோஷமான பந்துவீச்சாளராகவும், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கவும் முடியும் எனவும் உணர்த்தினார்.  அப்போதிருந்து, ரோகித் ஒரு கேப்டனாக எப்படி சிந்திக்கிறார் மற்றும் மற்றவர்களை விட ஒரு படி மேலே இருக்க முயற்சித்தார் என்பதை நான் புரிந்துகொண்டேன்" என ஓஜா கூறியுள்ளார்.