சி.எஸ்.கே - ஆர்.சி.பி:


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.பி.எல் சீசன் 17 நாளை (மார்ச் 22) நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்நிலையில் ஐ.பி.எல் நிர்வாகம் கேப்டன்கள் ஐபிஎல் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது.


இதில் ரசிகர்கள் சற்றும் எதிர்பாரா நிலையில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற்றிருந்தார். இச்சூழலில் இந்த சீசனில் ருதுராஜ் கேப்டன் புதிய கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த உள்ளார்.  அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வீரர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.






இதனிடையே இத்தனை ஆண்டுகள் சென்னை அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த தோனியையும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.


ரோகித் சர்மாவின் வைரல் பதிவு:


இந்நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா வெளியிட்ட பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கைகொடுப்பது போன்ற எமோஜியை பதிவு செய்துள்ளார். 






முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அந்த அணிக்காக 5 முறை கோப்பையை வென்றுகொடுத்துள்ளார். ஆனால் வெற்றிகரமாக செயல்பட்ட அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.


அதேநேரம் அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி தங்கள் அணியில் எடுத்து கேப்டன் பொறுப்பையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ்.தோனி இந்த சீசனில் முதன் முறையாக கேப்டன் என்ற பொறுப்பில் இல்லாமல் விளையாட உள்ளனர். இதனால் அவர்களின் கிரிக்கெட் வாழ்வு முடிவிற்கு வருகிறதா என்பது போன்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!