மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கடந்த 2011ஆம் ஆண்டும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி மும்பை அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடினார். 


5 முறை கோப்பை வென்ற முதல் கேப்டன்:


ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாவதற்கு முன்னர் இருந்தே, இன்னும் சொல்லப்போனால் இந்திய கிரிகெட் அணியில் அவருக்கான நிலையான இடம் கிடைப்பதற்கு முன்னதாக அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தனி அடையாளம் கிடைத்தது என்றால், அது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் மூலம்தான். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2013ஆம் ஆண்டு லீக் போட்டிகளுக்கு மத்தியில் நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு வரை மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு ஐந்து முறை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது மட்டும் இல்லாமல் ஐந்து முறையும் கோப்பையை வென்று அசத்தினார். இதனால் ஐபிஎல் தொடரில் ஐந்து கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். 




ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் ஐந்து கோப்பைகளை வென்றதும், இந்திய கிரிக்கெட் வட்டாரம் மட்டும் இல்லாமல், உலகின் பல்வேறு கிரிக்கெட் வாரியங்களைச் சேர்ந்த பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்களும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்சியை ரோகித் சர்மாவிடம் ஒப்படைப்பதற்கான சரியான தருணம் இதுதான் என கூறினர். ஒருசிலரோ உலகின் மிகப்பெரிய லீக் போட்டியில் ஒரு அணிக்காக ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்தவரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்காமல் வேறு யாரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்சியை கொடுக்கப்போகின்றீர்கள் என கேட்டனர்.


இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டார். ரோகித் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் விளையாடி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைச் சந்தித்தது. 


முத்திரை பதித்த ரோகித்


இப்படி ஐ.பி.எல். மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென நிரந்தர இடத்தினை ஏற்படுத்திக் கொண்டவர் என்றால் அதில் ரோகித் சர்மாவின் பெயரை கட்டாயம் குறிப்பிடலாம். அப்படியான ரோகித் சர்மா ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு தனது முதல் லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடினார். அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 17.4 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


அதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா மும்பை அணிக்காக 4வது வீரராக களமிறங்கினார். மொத்தம் 30 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா மூன்று பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார். இந்நிலையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கி விளையாடத் தொடங்கி இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 


மும்பை அணிக்காக இதுவரை..


ரோகித் சர்மா மும்பை அணிக்காக மட்டும் இதுவரை 201 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் இவர் ஐந்தாயிரத்து 159 ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் மட்டும் மொத்தம் 247 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா மொத்தம் 42 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட மொத்தம் 6 ஆயிரத்து 329 ரன்கள் குவித்துள்ளார். இதில் ரோகித் சர்மா 568 பவுண்டரிகளும் 264 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா இந்த ஆண்டில் மும்பை அணியின் வீரராக விளையாடி வருகின்றார்.