ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு எப்போது மீண்டும் திரும்புவார் என்று நீண்ட நாட்களாக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி மோசமாக கார் விபத்தில் சிக்கி ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அதன்பிறகு, நீண்ட நாட்களாக சிகிச்சை இருந்த இவர், தற்போது கிட்டத்தட்ட குணமடைந்துவிட்டார். மேலும், பண்ட் பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங்கிலும் பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தநிலையில், பண்ட் தனது சமூக வலைதளங்களில் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பண்ட் முதலில் விக்கெட் கீப்பிங் செய்து பயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து, பேட்டிங்கிலும் பெரிய பெரிய ஷாட்களை அடித்து பட்டையை கிளப்பினார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிரிக்பஸ்ஸின் அறிக்கையின்படி, இந்திய கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் வெளியிட்ட தகவலின்படி 26 வயதான ரிஷப் பண்ட் ஐபிஎல் 2024; டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் ரிஷப் பண்ட் செயல்படுவார் என்றும், அவருக்கு பதிலாக வேறு வீரர் விக்கெட் கீப்பராக அணியில் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்ட் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இவர் கடந்த மாதம் லண்டனில் சிகிச்சை பெற பிசிசிஐ ஏற்பாடு செய்தது.
பண்ட் ஐபிஎல்லில் விளையாட தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதி பெற வேண்டும். முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் பண்ட் உடற்தகுதி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “இந்த ஆண்டு பண்ட் விக்கெட் கீப்பிங் செய்ய முடியுமா இல்லையா என்பது எனக்கு முழுமையாக தெரியவில்லை. ஆனால், அவர் மீண்டும் உடற்தகுதி பெற கடுமையாக உழைத்து வருகிறார். வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுவேன் என்று பண்ட் நம்பிக்கையுடன் இருக்கிறார்” என கூறினார்.
ரிஷப் பண்ட் கிரிக்கெட் வாழ்க்கை:
ஐபிஎல் தொடரில் இதுவரை 98 போட்டிகளில் 2838 ரன்கள் குவித்துள்ளார் ரிஷப் பண்ட். மேலும், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 2271 ரன்களும், 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 865 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், பண்ட் இதுவரை 66 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 987 ரன்கள் எடுத்துள்ளார்.