சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வில்லியம்சன் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை - குஜராத் அணிகள் மோதல்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரரான கெய்க்வாட் சிறப்பான அடித்தளம் அமைத்து தந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அரைசதம் கடந்தார்.


வில்லியம்சன் காயம்:


கெய்க்வாட் 71 ரன்களை சேர்த்து இருந்த போது, 13வது ஓவரை ஜோஸ்வா லிட்டில் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை கெய்க்வாட் தூக்கி அடிக்க, பவுண்டரி கோட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த கேன் வில்லியம்சன் காற்றில் பறந்து பந்தை கேட்ச் பிடித்தார். ஆனால், நிலை தடுமாறி பவுண்டரி கோட்டிற்குள் விழுந்துவிடுவோம் என உணர்ந்த வில்லியம்சன், கீழே விழுவதற்கு முன்பாகவே பந்தை பவுண்டரி கோட்டிற்கு வெளியே வீசினார்.


தொடர்ந்து கீழே விழுந்தபோது அவரது வலது காலில், வில்லியம்சனின் மொத்த எடையும் தாங்கியதால் அவர் வலியால் கடும் அவதிக்கு ஆளாகினார். தனது மூட்டை பிடித்து வலியால் கடுமையாக தவித்தார். தொடர்ந்து, குஜராத் அணியை சேர்ந்த பயிற்சியாளர்கள் வந்து வில்லியம்சனை தாங்கி பிடித்து வெளியே அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வில்லியம்சன் பேட்டிங் கூட செய்யவில்லை.


வில்லியம்சன் விலகல்:


வில்லியம்சனின்  மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து அவர் முழுமையாக வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


ஐபிஎல் தொடரில் வில்லியம்சன்:


கடந்த 8 ஆண்டுகளாக ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்த வில்லியம்சனை, கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் அடிப்படை ஏலத்தொகையான 2 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது. இந்நிலையில், தொடரின் முதல் போட்டியிலேயே அவர் காயமடைந்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 76 போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன், 2,101 ரன்களை சேர்த்துள்ளார். இதில் 18 அரைசதங்கள் அடங்கும்.


குஜராத் அணி தோல்வி:


இதனிடயே, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய  ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 9 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 92 ரன்களை சேர்த்தார். இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியில், தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 63 ரன்களை சேர்த்தார்.  போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சாய் சுதர்சனும் பெரிதாக சோபிக்காவிட்டாலும் முக்கியமான கட்டத்தில் 22 ரன்கள் சேர்த்தார். இருப்பினும் சக வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.