ஐபிஎல் தொடர்:
நடப்பாண்டிற்கான ஐபிஎல் இறுதிகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இந்த வார இறுதியில் லீக் சுற்று முடிவடையவுள்ளது. களமிறங்கிய 10 அணிகளில் ஏற்கனவே டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்து விட்டன. அதேநேரம், குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே, இதுவரை அதிகாரபூர்வமாக பிளே-ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பெங்களூரு - ஐதராபாத் மோதல்:
இந்த சூழலில் இன்று நடைபெறும் தொடரின் 65வது லீக் போட்டியில், டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியின் நேரலையை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
பெங்களூரு அணி நிலவரம்:
நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி தலா 6 வெற்றி மற்றும் தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்றிற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். இதனால், இன்றைய போட்டியில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி களமிறங்கியுள்ளது. பெங்களூரு அணியின் மும்மூர்த்திகளான டூப்ளெசிஸ், கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல பேட்டிங் ஃபார்மை தொடருகின்றனர். வழக்கமாக பந்துவீச்சில் சொதப்பும் பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், ராஜஸ்தான் அணியை வெறும் 59 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் கிடைத்த உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களம் கண்டுள்ளது.
ஐதராபாத் அணி நிலவரம்:
ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் 12 போட்டிகளில் விளையாடி நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அதேநேரம், உள்ளூர் மைதானங்களில் விளையாட உள்ள கடைசி இரண்டு போட்டிகளிலும், ஆறுதல் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. தொடரில் இருந்து வெளியேறிவிட்டதால் எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாமல் விளையாட முடியும் என்பதால் அவர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. டெல்லி அணி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது போன்று, பெங்களூரு அணிக்கு ஐதராபாத் அணி அதிர்ச்சி கொடுத்து விடுமோ என்ற அச்சமும் ஆர்சிபி ரசிகர்கள் இடையே நிலவுகிறது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில், இரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஐதராபாத்தின் கரங்கள்தான் ஓங்கியுள்ளது. ஐதராபாத் அணி இதுவரை 12 போட்டிகளிலும் பெங்களூரு அணி 9 போட்டிகளிலும் வென்றுள்ளது.
சென்னை அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு:
இதனிடையே, இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் ஒருவேளை பெங்களூரு அணி தோல்வியுற்றால், சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றிற்கு செல்வது உறுதியாகிவிடும். ஒரு வேளை பெங்களூரு அணி வெற்றி பெற்றால், அடுத்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். அந்த போட்டியில் சென்னை அணி தோற்றுவிட்டால், பிளே-ஆஃப் வாய்ப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் மும்பை, லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளின் வெற்றி தோல்வி தான் சென்னையின் விதியை தீர்மானிக்கும். இதனால், இன்றைய போட்டியின் முடிவு சென்னை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.