இந்தியன் பிரீமியர் லீக்கின் 32வது போட்டியானது நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை விட்டுகொடுத்தாலும் 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களை குவித்தது. கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஃபாப் டு பிளெசிஸ் அதிரடியாக விளையாடி தங்கள் அணிக்காக போராடி ரன் வேட்டையில் ஈடுபட்டனர்.
பவர்பிளேயின் முடிவில் பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஆன்பீல்ட் நடுவர் மைக்கேல் காஃப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அனைவரும் கூடி நடுவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். RR அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தலையிட்டு இருவருக்குமிடையிலான வாக்குவாதத்தை நிறுத்த வேண்டியதாயிற்று.
என்னதான் பிரச்சனை?
ஆறாவது ஓவருக்கு பிறகு இடைவேளையின்போது, ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் தங்களுக்கு சரியான ரீதியில் கால அவகாசம் வழங்கப்பட்டதா என்பது குறித்து நீண்ட நேரம் நடுவருடன் வாக்குவாதம் செய்தார். அப்போது, நடுவர் சாம்சனிடம் இது வெறும் இடைவேளையே தவிர, ஸ்ட்ரெஜடிக் டைம் அவுட் இல்லை என தெளிவுபடுத்தினார்.
இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போட்டி சுருக்கம்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் முதல் பந்தே விராட் கோலி அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால், மைதானத்தில் நீண்ட நேரம் மௌனம் நீடித்தது. இருப்பினும், க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஃபாஃப் ஆகியோரின் சிறப்பாக விளையாடி, 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராயல்ஸ் அணி சார்பில் சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அதன் பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 182 மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஜெய்ஸ்வால் 47 ரன்களும், படிக்கல் 52 ரன்களும் எடுத்திருந்தனர்.