IPL 2023: ஐபிஎல் போட்டியில் நாளுக்கு நாள் வியப்படையவைக்கும் அளவிலான போட்டிகள் அரங்கேறி வருகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் மீண்டும் இப்படியான ஒரு கிரிக்கெட் நிகழ்வு நடக்காது என்பதைப்போல் ஒவ்வொரு வீரரும் தங்களது முழுதிறனையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக ஐபிஎல் போட்டி தவிர மற்றொன்றை கூற வேண்டுமானால் அது இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலக்கோப்பை போட்டிதான். ஆமாம், போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளதால், இந்திய மைதானங்களில் அதன் காலநிலைக்கு தங்களை தகவமைத்து சிறப்பாக விளையாட முடியுமென தங்களது நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவிக்கும் விதமாக வெளிநாட்டு வீரர்களும், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் இதையெல்லாம் இந்திய அணிக்காக நிகழ்த்திக் காட்டுவேன் என்பதைப்போல் இந்திய அணி வீரர்களும் செயல்பட்டு வருகின்றனர் எனலாம். 


இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, கடந்த 22-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி குறித்து நாம் அனைவரும் அறிந்ததுபோல் பஞ்சாப் அணி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது, இறுதி ஓவரினை வீசிய அர்ஷ்தீப் சிங்தான். அதாவது டி20 போட்டியில் சேஸிங்கில்,  பந்து வீசும் அணிக்கு 19 ஓவர்தான் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும், அந்த ஓவரும் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றால்,  20 ஓவரினை வீசுபவர் மீது தான் முழுப்பொறுப்பும் ஒப்படைக்கப்படும். அப்படித்தான் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிடம் பந்து கொடுக்கப்பட்டது.  






20 ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்த அர்ஷ்தீப் சிங், இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அவர் கைப்பற்றிய இந்த இரண்டு விக்கெட்டுகளும் க்ளீன் போல்ட் மூலம் கிடைத்தது. அதுவும் மூன்று ஸ்டெம்ப்களின் நடு ஸ்டெம்ப் இரண்டு முறை உடைக்கப்பட்டது. இதனால் போட்டி பஞ்சாப் கரங்களுக்குச் சென்றதைவிடவும் இரண்டு முறை, அடுத்தடுத்த பந்துகளில் நடு ஸ்டெம்ப் உடைக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஹாட்ரிக் விக்கெட்டுக்கு முயற்சி செய்த அர்ஷ்தீப் சிங்கிற்கு அது கிடைக்கமல் போனாலும் இந்த சீசனின் மிகச்சிறந்த இறுதி ஓவர்களில் அதுவும் ஒன்றாக இருக்கும் எனலாம். 


இரண்டு முறை உடைக்கப்பட்ட நவீன வசதியுடைய இந்த எல்.இ.டி ஸ்டெம்ப்களின் விலை எவ்வளவு எனத் தெரிந்தால் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் உறைந்து போவோம். ஆமாம், ஒரு ஜோடி எல்.இ.டி ஸ்டெம்ப்களின் விலை 40 ஆயிரம் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 32.81 லட்சம். இதனை கேட்கவே இவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. அமாம், இந்த நவீன எல்.இ.டி ஸ்டெம்ப்கள் முதல் முறையாக 2011 உலகக்கோப்பை போட்டியில் சர்வதேச போட்டியில் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பரவலாக அனைத்து வகை போட்டிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.