ஐ.பி.எல் 2024:



ஐ.பி.எல் சீசன் 17 கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 14 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2) 15 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 


அந்தவகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் களம் இறங்கினார்கள். இதில் 12 பந்துகள் மட்டும் களத்தில் நின்ற கே.எல்.ராகுல் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 20 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த தேவ்தட் படிக்கல் 11 பந்துகள் களத்தில் நின்று 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனிடையே குயின்டன்  டி காக் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார். 


பின்னர் வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் டி காக் உடன் ஜோடி சேர்ந்து ஓரளவிற்கு ரன்களை சேர்த்தார். இதனிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 15 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 24 ரன்களை எடுத்தார். 13.5 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.


பெங்களூரு அணிக்கு 182 ரன்கள் இலக்கு:






லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தனி ஒருவராக நின்று ரன்களை சேர்த்து கொண்டிருந்த குயின்டன் டி காக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர் ரீஸ் டோப்லி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த வகையில் மொத்தம் 56 பந்துகள் களத்தில் நின்ற குயின்டன் டி காக் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 81 ரன்கள் எடுத்தார்.


சிக்ஸர்கள் பறக்க விட்ட பூரன்:


இதனிடையே ஆயுஷ் படோனி டக் அவுட் முறையில் நடையைக்கட்டினார். மறுபுறம் நிக்கோலஸ் பூரன் ஓரளவிற்கு லக்னோ அணிக்கு ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார். டெத் ஓவர்களில் சிறப்பாக விளையாடிய பூரன் 21 பந்துகளில் 1 பவுண்டரி 5 சிக்ஸர் என மொத்தம் 40 ரன்களை விளாசினார்.


இவ்வாறாக 20 ஓவர்களில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி  181 ரன்கள் எடுத்தது. தற்போது 182 ன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களம் இறங்க உள்ளது.