ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் முடிவுகள் மற்றும் அதுதொடர்பான சாதனைகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


பெங்களூரு - கொல்கத்தா மோதல்:


ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதன் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். முன்னதாக இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் வரலாற்றில் யார் கை ஓங்கியுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


நேருக்கு நேர்:


ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே விளையாடி வரும் இந்த இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 17 முறையும், பெங்களூரு அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி நான்கு போட்டிகளில் மூன்றில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 10 போட்டிகளில் கொல்கத்தா அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், சின்னசாமி மைதானத்தில் இதுவரை 91 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஸ்கோர் விவரங்கள்:


கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 213


பெங்களூரு அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 222


கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 49


பெங்களூரு அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 84


தனிநபர் சாதனைகள் (அணியில் உள்ள வீரர்களின் அடிப்படையில்)


கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த பெங்களூரு வீரர்: கோலி, 807 ரன்கள்


பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த கொல்கத்தா வீரர்: ரஸ்ஸல், 364 ரன்கள்


கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த பெங்களூரு வீரர்: சிராஜ், 10 விக்கெட்கள்


பெங்களூரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த கொல்கத்தா வீரர்: நரைன், 23 விக்கெட்கள்


கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக கேட்ச் பிடித்த பெங்களூரு வீரர்: கோலி, 17 கேட்ச்கள்


பெங்களூரு அணிக்கு எதிராக அதிக கேட்ச் பிடித்த கொல்கத்தா வீரர்: ராணா, 5 கேட்ச்கள்


நடப்பு தொடரில் இதுவரை:


நடப்பு தொடரில் இதுவரை பெங்களூரு அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலும், கொல்கத்தா அணி 2 வெற்றிகளுடன் 8வது இடத்திலும் உள்ளது.