rcb unbox event 2025: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நிகரான ரசிகர்கள் கூட்டம் ஐபிஎல் தொடருக்கு உள்ளது. ஐபிஎல் தொடரில் அதிகளவு ரசிகர்கள் கொண்ட அணிகளில் பெங்களூர் அணி தவிர்க்க முடியாத அணியாகும். 18வது சீசனாக நடைபெற உள்ள இந்த ஐபிஎல் தொடரில் தங்களது முதல் கோப்பையை கைப்பற்றிவிட அந்த அணி முழுமூச்சில் தயாராகி வருகிறது. 


ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்வு:


ஆர்சிபி அணியின் அன்பாக்ஸ் நிகழ்வு இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதில் ஆர்சிபி வீரர்களை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். 


விராட் கோலி, ரஜத் படிதார், புவனேஷ்வர்குமார், டிம் டேவிட், ஷெப்பர்ட் என அனைத்து வீரர்களும் பங்கேற்றனர். இந்த அன்பாக்ஸ் நிகழ்ச்சியின்போது ஆர்சிபி வீரர்கள் இடையே சிக்ஸர் அடிக்கும் போட்டி நடத்தப்பட்டது. 


சிக்ஸர் மழை:






ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடந்த இந்த போட்டியில் பில் சால்ட், ரோமாரியோ ஷெப்பர்ட், லிவிங்ஸ்டன்,  சுவஸ்திக் ஷர்மா, டிம் டேவிட், இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல், மனோஜ், ஜிதேஷ் சர்மா ஆகியோர் சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 


இவர்கள் அடித்த பந்துகளில் இரண்டு பந்துகள் மைதானத்திற்கு வெளியே சென்றது. ஒரு பந்து எம்ஜி சாலைக்கும், மற்றொன்று கப்பன் பூங்காவிற்கும் சென்றது. இதைப் பார்த்த ஆர்சிபி ரசிகர்கள் தங்களது அணி வீரர்களை உற்சாகப்படு்ததினர். நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி கொல்கத்தா அணியுடன் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகி்றது. 


பேட்டிங், பவுலில் பலம்:


முதல்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உற்சாகத்தில் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணி இந்த முறை ரஜத் படிதார் தலைமையில் களமிறங்கியுள்ளது. ரஜத் படிதார், விராட் கோலி, லிவிங்ஸ்டன், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல், பில் சால்ட், படிக்கல், ஜிதேஷ் சர்மா, சுவஸ்திக் சர்மா, ஷெப்பர்ட் என பேட்டிங் வரிசை ஆர்சிபிக்கு மிகவும் பலமாக உள்ளது. 


அதேபோல பந்துவீச்சிலும் புவனேஷ்வர், நுவன் துஷாரா, குருணல் பாண்ட்யா, யஷ் தயாள், சுயாஷ் தர்மா, லுங்கி நிகிடி ஆகியோர் உள்ளனர்.


ஈடன் கார்டனில் நடக்கும் முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்க ஆர்சிபி அணியும், நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் முதல் போட்டியில் களமிறங்கும் கொல்கத்தா அணியும் வெற்றி பெற முனைப்புடன் ஆடும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதரபாத் ஆகிய பலமிகுந்த அணிகளுடன் சாம்பியன் பட்டத்திற்காக மல்லுகட்டும் குஜராத், டெல்லி, பஞ்சாப், லக்னோ, ராஜஸ்தான் அணிகளை ஆர்சிபி அணி சமாளித்து சிறப்பாக ஆடி வெற்றி பெற்றால் மட்டுமே சாம்பியன் மகுடம் பெங்களூருக்கு வசம் ஆகும்.