ஐபிஎல் தொடரில் இன்று தரம்சாலாவில் நடந்து வரும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது. 

பிரப்சிம்ரன் அபாரம்:

டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசியது. இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய பஞ்சாபிற்கு முதல் ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது. இளம் வீரர் பிரியன்ஷ் 1 ரன் எடுத்து அவுட்டானார். பிரப்சிம்ரன் - இங்கிலீஷ் இருவரும் அதிரடியாக ஆடினார். பிரப்சிம்ரன் பவுண்டரியாக விளாச ஜோஷ் இங்கிலிஷ் சிக்ஸராக விளாசினார். சிறப்பாக ஆடிய அவர் ஆகாஷ் பந்தில் அவுட்டானார். அவர் 14 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

ஸ்ரேயாஸ் சரவெடி:

ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் சென்று கொண்டிருந்த நிலையில் களத்திற்கு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அதனது அதிரடியை தொடர்ந்தார். மயங்க் யாதவ், ஆவேஷ் கான், திக்வேஷ், பிரின்ஸ் யாதவ் ஆகியோரை பிரப்சிம்ரன் விளாசித்தள்ள மறுமுனையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் விளாசினார். இதனால், ரன்ரேட் உச்சத்திற்குச் சென்றது. 

அபாரமாக ஆடிய பிரப்சிம்ரன் அரைசதம் விளாசினார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை திக்வேஷ் ரதி அவுட்டாக்கினார். அவரது சுழலில் சிக்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த நேகல் வதேராவும் மட்டையை விளாச அவர் 9 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

237 ரன்கள் டார்கெட்:

அப்போது களத்திற்கு வந்த ஷஷாங்க் சிங் பட்டையை கிளப்ப மறுமுனையில் பிரப்சிம்ரன் சதத்தை நோக்கி முன்னேறினார். ஆனால், அவரது சதத்திற்கு திக்வேஷ் ரதி முட்டுக்கட்டை போட்டார். பிரப்சிம்ரன் 48 பந்துகளில் 6 பவுண்டரி 7 சிக்ஸருடன் 91 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

கடைசியில் ஷஷாங்க் சிங், ஸ்டோய்னிஸ் ரன்மழை பொழிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் மொத்தம் 16 சிக்ஸர்கள் விளாசப்பட்டது. மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 60 ரன்களையும், ஆவேஷ்கான் 4 ஓவர்களில் 57 ரன்களையும் விளாசினார். ஆகாஷ் மகராஜ்சிங் கட்டுக்கோப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.