IPL 2025 KKR vs RR: ஐபிஎல் தொடரில் இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
நிதான தொடக்கம்:
இதையடுத்து, குர்பாஸ் - சுனில் நரைன் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி நிதானமாகவே ஆடியது. சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து அதிரடி காட்ட முயற்சித்த சுனில் நரைன் யுத்விர்சிங் பந்தில் போல்டானார். அவர் 9 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 11 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து, கேப்டன் ரஹானே களமிறங்கினார். மறுமுனையில் பவுண்டரிகளாக குர்பாஸ் விளாசினார். ஆனால், அவரை தீக்ஷனா தனது சுழலால் காலி செய்தார். அவர் 25 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸர் விளாசி 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ரகுவன்ஷி பொறுப்புடன் ஆடினார். இதனால், ரன்ரேட் 9 என்ற அளவிலே இருந்தது.
ரஸல் காட்டடி:
சிறப்பாக ஆடிய ரகானே முழு அளவில் அதிரடி காட்ட முயற்சித்த நிலையில் 24 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்பு ரஸல் களமிறங்கினார். இந்த போட்டியில் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கலாம் என்பதால் ரஸல் களமிறங்கியது முதலே அதிரடி காட்டினார். அவர் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார்.
ஆர்ச்ர், தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், ஹசரங்கா என யார் வீசினாலும் ரன்களை விளாசினார். இதனால், கொல்கத்தா ரன்ரேட் ஜெட் வேகத்தில் ஏறியது. மறுமுனையில் சிறப்பாக ஆடி அரைசதத்தை நெருங்கிய ரகுவன்ஷி அவுட்டானார். அவர் 31 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்பு களமிறங்கிய ரிங்குசிங் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினார்.
207 ரன்கள் டார்கெட்:
அபாரமாக ஆடிய ரஸல் அரைசதம் கடந்தார். இதனால், கொல்கத்தா அணி 200 ரன்களை கடந்தது. கடைசியில் கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்களை எட்டியது. ரஸல் 25 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்தும், ரிங்கு சிங் 6 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 19 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். ஆகாஷ் மத்வால் 3 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக்கொடுத்தார்.