PBKS vs RR IPL 2023:ஐபிஎல் தொடரின் இறுதிகட்டத்தினை எட்டஎட்ட பரபரப்பும் விறுவிறுப்பும் அதிகமாகிகொண்டே இருக்கிறது. இன்று மோதவுள்ள இரு அணிகளில் ஒரு அணிக்கு ப்ளேஆஃப் வாய்ப்பு கொஞ்சம் உள்ளது. மற்றொரு அணிக்கு ப்ளேஆஃப் வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதில் இல்லை. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 8வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.  


இந்த போட்டி இன்று அதாவது மே 19ஆம் தேதி தொடங்கியுள்ள இந்த போட்டி உலகின் மிக அழகான மைதானங்களில் ஒன்றான தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. 


இரு அணிகளும் கடந்த போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 112 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. அதேபோல், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியும் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இரு அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்புகளும் முடிவுக்கு வந்தன. 


இந்த சீசனில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இது இரண்டாவது முறையாகும். முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 64 ரன்களும்,  நாதன் எல்லிஸ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 


இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறும் போட்டி இரு அணிகளுக்கும் இந்த சீசனில் கடைசி லீக் போட்டி என்பதால் கட்டாயம் இந்த போட்டியினை வெற்றியுடன் முடிக்க தீவிரமாக இருப்பார்கள். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அதன் ரன்ரேட் அதிகரிக்கும், அப்படி அதிகரிக்கும் ரன்ரேட் பெங்களூரு அணியை விட அதிகமாக இருந்தால் மட்டும் தான் ராஜஸ்தான் அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க முடியும். காரணம், பெங்களூரு அணி தனது இறுதி போட்டியான குஜராத்துடன் தோல்வியைச் சந்திக்க வேண்டும். அதேபோல் மும்பை அணி ஹைதராபாத் அணியிடம் தோல்வியைச் சந்திக்க வேண்டும். அப்போது தான் ராஜஸ்தான் அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இன்றைய போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் ராஜஸ்தான் அணி  அதன் முழு பலத்தினையும் வெளிக்காட்ட தீவிரமாக இருக்கும். 


மைதானத்தினைப் பொறுத்தவரையில், இந்தியாவில் உள்ள சிறிய மைதானங்களில் தர்மசாலா மைதானமும் ஒன்று என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி 220 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டும் தான் போட்டியை வெல்ல முடியும். அதேபோல் பந்து வீச்சு இந்த மைதானத்தில் எடுபடுவது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் போல்ட் போன்ற உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளருக்கு இந்த மைதானம் கொஞ்சம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.