ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் இன்று (மே5) 53 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வரும் இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. அதன்படி அந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.


 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினார்கள். இதில் அஜிங்க்யா ரஹானே 7 பந்துகளில் 1 பவுண்டரி விளாசி 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் களம் இறங்கினார் டேரில் மிட்செல். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர்ப்ளேவில் 60 ரன்களை எடுத்தது. இதனிடையே ராகுல் சஹர் வீசிய பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 21 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 1சிக்ஸர்கள் என 32 ரன்கள் எடுத்தார். அடுத்தாக களம் இறங்கிய ஷிவம் துபே அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கோல்டன் டக் டவுட் ஆனார். இவரது விக்கெட்டையும் ராகுல் சஹார் தான் வீழ்த்தினார். பின்னர் வந்த மொயின் அலி டேரில் மிட்செல் உடன் ஜோடி சேர்ந்தார். இவர்களது ஜோடி ஓரளவிற்கு ரன்களை சேர்த்துக் கொண்டிருந்த போது டேரில் மிட்செல் அவுட் ஆனார். 19 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என மொத்தம் 30 ரன்கள் எடுத்தார். இதனிடையேஎ 17ரன்களில் மொயின் அலியும் விக்கெட்டை பறிகொடுத்தார்.


பின்னர் களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் வந்த மிட்செல் சார்ட்னர் 11 ரன்கள் மற்றும் சர்துல் தாகூர் 17 ரன்கள் எடுத்து விக்கெட்டானார்கள். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கினார் தோனி. ஆனால் இறங்கிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆனார் அவர். இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அதன்படி தோனியின் விக்கெட்டை ஹர்சல் படேல் எடுத்தார். இதனிடையே ரவீந்திர ஜடேஜாவும் விக்கெட்டை பறிகொடுத்தார். 26 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 43 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்ததது.


சி.எஸ்.கே வெற்றி:


168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களம் இறங்கினார்கள். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 6 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக களம் இறங்கிய ரிலீ ரோசோவ் 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட் இழக்க ஷஷாங்க் சிங் ஓரளவிற்கு நன்றாக விளையாடி 27ரன்கள் எடுத்தார். இதனிடையே பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனால் அடுத்து வந்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கர்ரன் 7 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களம் இறங்கிய அசுதோஷ் சர்மா 3 ரன்கள், ஹர்ஷல் படேல் 12 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவின் படி 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.