மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில்  சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பிடித்த கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மும்பையின் வான்கடே மைதானத்தில் நடப்பு ஐபிஎல் தொடரின் 12 வது ஆட்டத்தில் மும்பை- சென்னை அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட் செய்த வந்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக இஷான் கிஷன் 32 ரன்களும், டிம் டேவிட் 31 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 21 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


இதன்பின் களம் கண்ட சென்னை அணியில் தொடக்க வீரர் டெவன் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற, ரஹானே களம் கண்டார். பட்டாஸ் வெடித்து சிதறுவது போல பேட்டிங்கில் மும்பை அணியை கதற விட்டார். 27 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு ஜோடி வெற்றி பெற செய்தது. 18.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை சென்னை அணி எட்டியது. 


கேட்ச் பிடித்த ஜடேஜா.. அன்றே கணித்த தோனி 






கேப்டன் ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் குவித்தனர். துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ரோகித் சர்மா ஸ்டம்புகள் சிதற வெளியேற இதனையடுத்து கேமரூன் க்ரீன் பேட் செய்ய வந்தார். 


போட்டியின் 9வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா வீச வந்தார். அப்போது மும்பை அணி வீரர் எதிர்திசையில் அடிக்க, தன் மீது பந்து பட்டு அடிபடாமல் இருக்க ஜடேஜா கையை தூக்கினார். அப்போது க்ரீன் அடித்த பந்து நேராக ஜடேஜா கைக்கு சென்றது. இதனை லாபகமாக அவர் பிடித்துக் கொள்ள பரிதாபமாக கேமரூன் க்ரீன் 12 ரன்களுக்கு வெளியேறினார். இந்த கேட்ச் உடனடியாக இணையத்தில் வைரலானது. 


அதுமட்டுமல்லாமல் 10 ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் தோனி ஜடேஜாவின் கேட்ச் குறித்து பதிவிட்ட ட்வீட் ஒன்றும் இணையத்தில் வைரலானது. 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி தோனி வெளியிட்ட அந்த ட்வீட்டில், 
“சர் ஜடேஜா கேட்ச் எடுக்க ஓடவில்லை, ஆனால் பந்து தான் ஜடேஜாவை கண்டுபிடித்து அவரது கையில் விழுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.