ரசிகர்கள் எதிர்பார்ப்பது போலவே ஐபிஎல் ஏலம் நடைபெறாது என்று சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் 2025:
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்கவைக்க போகிறோம் என்பதை வரும் தீபாவளி அன்று மாலை 5 மணிக்கு அறிவிக்க இருக்கிறது. இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்கள் தக்க வைக்கும் என்று ரசிகர்களை ஒரு பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தங்களுக்கு பிடித்த வீரர்கள் தங்களது அணியில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
நீங்கள் எதிர்பார்ப்பது போல் நடக்காது:
இதனை கிண்டல் செய்யும் விதமாக தோனி தற்போது பேசி இருக்கிறார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, "நீங்கள் எதிர்பார்ப்பது போன்று ஐபிஎல் ஏலம் நடைபெறாது. அது ஒரு வினோதமான நிகழ்வு. ஏனெனில் ரசிகர்கள் எந்தெந்த அணியில், எந்தெந்த வீரர்கள் விளையாடலாம் என்று தங்களுக்குள் ஆசைப்படலாம்.
ஆனால் செயல் முறையில் அப்படி அனைத்து வீரர்களையும் விளையாட வைப்பது கடினம். ஏனெனில் ஒவ்வொரு அணியின் நிர்வாகமும் தங்களது அணியில் உள்ள தொகை மற்றும் வீரர்களின் பலம் ஆகியவற்றை ஆராய்ந்தே வீரர்களின் தேர்வில் ஈடுபடுவார்கள்.
ரசிகர்கள் ஆர்வத்தின் மிகுதியாக எந்தெந்த அணி, எந்தெந்த வீரர்களை வாங்கும் என்று கணிக்கலாம். ஆனால் ஐபிஎல் ஏலத்தில் நினைத்தது போல எந்த ஒரு அணியும் எந்த ஒரு வீரரையும் வாங்க முடியாது. ஏனெனில் அதிக பணம் கையிருப்பு கொண்ட அணி எந்த வீரர்களையும் வாங்க நினைக்கும். அப்படி பெரிய தொகைக்கு ஒரு வீரரை வாங்கினால் அந்த வீரர் சிறப்பாகவே விளையாடியாக வேண்டிய சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் ஐபிஎல் ஏலத்தில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் எந்த அணிக்கு நீங்கள் தேர்வானாலும் அந்த அணிக்கு தாங்கள் சிறப்பாக செயல்பட்டால் அந்த அணிக்கு வணிகம் அதிகரிக்கும், உங்களது பொருளாதாரமும் உயரும்"என்று கூறியுள்ளார் எம்.எஸ்.தோனி.