கூடிய விரைவில் தோனியுடன் இணைந்து விளையாடுவேன் என்று முஸ்தாபிசுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் முஸ்தாபிசுர் ரஹ்மான். இந்நிலையில் தான் இவர் பாதியிலேயே இந்த சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த சீசனை பொறுத்தவரை மதீஷ பத்திரனாவுடன் இணைந்து முஸ்தாபிசுர் ரஹ்மான் சிறப்பாக விளையாடினார். ஒரு சில ஆட்டங்களை தவிர்த்து மற்ற போட்டிகளில் எல்லாம் தன்னுடைய பங்களிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நல்ல முறையில் வெளிப்படுத்தினார்.
சிஎஸ்கே அணிக்காக நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதில் அவருடைய சிறந்த செயல்பாடு 29 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எடுத்ததாகும். கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இதில் முதல் சீசனில் அவர் 17 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் 2021 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதற்கு பிறகு 2024 ஆம் ஆண்டு தான் 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை எடுத்து இருந்தார்.
அணியில் இருந்து விலகிய முஸ்தாபிசுர் ரஹ்மான்:
இந்நிலையில் தான் முஸ்தாபிசுர் ரஹ்மானை சென்னை அணி நிர்வாகம் வழி அனுப்பி வைத்திருக்கிறது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி தன்னுடைய ஜெர்ஸியில் கையெழுத்து போட்டு முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “எல்லாவற்றிற்கும் நன்றி மஹி பாய். உங்களைப் போன்ற ஜாம்பவான்களுடன் ஒரே டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டது ஒரு சிறப்பு உணர்வாக இருந்தது. ஒவ்வொரு முறையும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. நீங்கள் தமக்கு பல யுக்திகளையும் நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். இனி கூடிய சீக்கிரம் உங்களுடன் மீண்டும் விளையாடுவேன் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார் முஸ்தாபிசுர் ரஹ்மான்.