CSK Kartik Sharma: சென்னை அணியால் ரூ.14.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கார்த்திக் சர்மா, மோசமான சூழலில் வளர்ந்து இந்த உச்சத்தை எட்டியது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
சிஎஸ்கேவின் சிங்கக் குட்டி:
ஐபிஎல் 2026 எடிஷனுக்கான மினி ஏலம் அண்மையில் அபுதாபியில் நடந்து முடிந்தது. அதில் கேமரூன் க்ரினை தாண்டி பலரையும் ஆச்சரியப்படுத்திய நிகழ்வு என்றால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் இரண்டு இளம் வீரர்கள் தலா ரூ.14.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதாகும். ஆம், சர்வதேச போட்டிகளில் இதுவரை விளையாடாவிட்டாலும், உள்ளூர் போட்டிகளில் அசத்திய பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இருவரை சென்னை அணி போட்டி போட்டு எடுத்தது. அதிலும் 19 வயதே ஆன கார்திக் சர்மாவிற்கு அடித்த ஜாக்பாட் என்பது, அவரது கிரிக்கெட் கதைக்கான வெற்றி மட்டும் அல்ல. தியாகம் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் பலனாக பார்க்கப்படுகிறது.
கையில் பணம் இல்லாததல் பசியுடன் தூங்கவும், இரவு விடுதிகளில் தஞ்சமடையவும் கட்டாயப்படுத்தப்பட்ட கார்த்திக் சர்மா, இன்று ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். சென்னை அணியால் ரூ.14.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு பெற்றோருடன் தனது சொந்த ஊரான பரத்பூருக்கு சென்ற கார்திக்கிற்கு உணர்வுப்பூர்வமான மற்றும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மகனுக்காக சொத்துகளை விற்ற தந்தை
போதிய வருமானம் இல்லாமல் தவித்த காலங்கள் குறித்து பேசிய கார்திக்கின் தந்தை மனோஜ், “எங்களது வருமானம் குறைவாக இருந்தது. ஆனால், என்ன ஆனாலும் சரி மகன் கார்த்திக்கை கிரிக்கெட் வீரராக உருவாக்க வேண்டும் என நானும், எனது மகன் ராதாவும் கனவு கண்டோம். இரண்டரை வயது சிறுவனாக இருந்தபோதே கார்திக் அடித்த பந்து பட்டு இரண்டு புகைப்பட ஃப்ரேம்கள் உடைந்தன. அன்று முதல் அவரை கிரிக்கெட்டராக முடிவெடுத்தோம். விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கலைந்த கிரிக்கெட் கனவை எனது மகன் மூலம் நிறைவேற்ற நினைத்தேன்”என தெரிவித்தார். மகனின் கிரிக்கெட் பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்கான செலவுகளுக்காக சொந்தமாக இருந்த வீட்டு மனை மற்றும் விவசாய நிலங்களையும் அவர்கள் விற்றுள்ளனர். தாய் ராதா சொந்த சந்தோஷங்களை தியாகம் செய்து, கையில் இருந்த நகைகளை விற்று மகனுக்கான செலவுகளை செய்துள்ளார். குடும்பத்தின் சூழல் மோசமடைந்த போதிலும், மகனின் கனவு உடைந்துப்போகாமல் இருக்க தொடர்ந்து ஆதரவு அளித்துள்ளனர்.
கார்திக்கிற்கான திருப்புமுனை:
க்வாலியரில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் தொடர் தான் கார்திக்கின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக உருவெடுத்துள்ளது. தனது தந்தையுடன் அங்கு சென்றிருந்தபோது, 4 அல்லது ஐந்து போட்டிகளில் அவரது அணி வெளியேறிவிடும் என எதிர்பார்த்துள்ளார். அந்த அளவிற்கு தான் மனோஜிடம் செலவுக்கான பணமும் இருந்துள்ளது. ஆனால், கார்திக்கின் அபாரமான செயலால் அவரது அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், செலவுக்கு கையில் பணம் இல்லாததால், அந்த நேரத்தில் உணவு இன்றி இரவு விடுதியில் தங்கியுள்ளனர். அந்த இறுதிப்போட்டியில் வென்றபிறகு கிடைத்த பரிசுத் தொகையை பயன்படுத்தியே இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
கார்த்திக் கடந்த கடினமான சூழல்
கார்த்திக் திறமையானவராக இருந்தாலும், அவரது பயணம் என்பது எளிதானதாக இருக்கவில்லை. 14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான போட்டிகளில் விளையாடினாலும், 4 ஆண்டுகள் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பலர் இந்த நேரத்தில் கிரிக்கெட்டே வேண்டாம் என விலகியிருக்கலாம். ஆனால், கார்த்திக் அதை செய்யவில்லை. தொடர்ந்து பயிற்சி பெற்று வரவே, 19வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் வாய்ப்பினை பெற்றார். தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சி கோப்பையில் களமிறங்கினார்.
கதவுகளை உடைத்த கார்த்திக்
உள்ளூர் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டதற்கான பரிசாக தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அண்மையில் தான் 12ம் வகுப்பை முடித்த கார்த்திக், கிரிக்கெட்டுடன் சேர்ந்து தனது கல்வி பயணத்தையும் தொடர முடிவு செய்துள்ளார். கார்த்திக்கின் இளைய சகோதரர் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டியுள்ள நிலையில், முதல் சகோதரர் படிப்பில் அதிக கவனம் கொண்டவராக திகழ்கிறார். நிலம் மற்றும் நகைகளை விற்பதில் இருந்து இரவு தங்குமிடங்களில் பசியுடன் தூங்குவது வரை, அவரது குடும்பத்தின் தியாகங்கள் தான் கார்த்தியின் வெற்றிக்கான பின்புலமாக அமைந்துள்ளன. கார்த்திக்கின் கதை சிறிய நகரங்கள் மற்றும் நிதி ரீதியாக சவாலான பின்னணியைச் சேர்ந்த எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது.