2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் லீக்கில் இருந்து முகமது ஷமி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலில் ஏற்பட்டுள்ள காயத்தாலும், காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், அதற்காக முகமது ஷமி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதும் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சு குழுவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் லீக் இன்னும் சில வாரங்களில் தொடங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்க செல்லவுள்ளதாகவும், அதனால் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் லீக்கில் இருந்து முழுவதுமாக விலகவுள்ளார். 


குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமான 2022ஆம் ஆண்டு கோப்பையை ஹர்திக் பாண்டியா தலைமையில் வென்று அசத்தியது. இது மட்டும் இல்லாமல், அடுத்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி கடைசி பந்தில் கோப்பையை சென்னை அணியிடம் இழந்தது.  இதனால் அறிமுகமான முதல் இரண்டு ஆண்டுகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. 


இப்படியான நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ப்ளேயர்ஸ் ட்ரேடிங்கின்போது, குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி ட்ரேட் செய்தது. இதுமட்டும் இல்லாமல், மும்பை அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. 


இதனால் குஜராத் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. குஜராத் அணியின் முக்கியமான வீரர்களில் யாராவது நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. அதில், கேன் வில்லியம்சன், முகமது ஷமி, டேவிட் மில்லர், சுப்மன் கில் ஆகியோரது பெயர் அடிப்பட்டது. இறுதியில் கேப்டன்சி சுப்மன் கில் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் முகமது ஷமி பந்து வீச்சு குழுவின் தலைவராக செயல்பட்டு வருகின்றார். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது ஷமி ஐபிஎல் தொடரில் தடம் பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளார். இது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது. 


2013ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் விளையாடி வரும் முகமது ஷமி இதுவரை 110 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதுவரை ஷமி 127 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இவரது ஐபிஎல் பெஸ்ட் என்பது, 11 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியது.