ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


லக்னோ - மும்பை மோதல்:


லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 63வது லீக் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், க்ருணால் பாண்ட்யா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோத உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றில் தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லு கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மும்பை அணி நிலவரம்:


ஆரம்பத்தில் வழக்கம்போல் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தாலும், சுதாரித்துக்கொண்ட மும்பை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் நீடிக்கிறது. இன்றையை போட்டியில் வெற்றி பெற்றால், மும்பை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் வலுவான குஜராத் அணியை வீழ்த்திய நம்பிக்கையுடன், மும்பை அணி இன்று களமிறங்குகிறது. எவ்வளவு பெரிய இலக்கை கொடுத்தாலும் துரத்தி அடிக்கும் அளவிற்கு மும்பை அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. அதேநேரம், பேட்ஸ்மேன்கள் எவ்வளவு பெரிய ஸ்கோரை எதிரணிக்கு இலக்காக நிர்ணயித்தாலும் அதை விட்டுக்கொடுக்கும் அளவிற்கு மோசமான பந்துவீச்சு இருப்பது தான் மும்பை அணியின் பலவீனமாக உள்ளது. 


லக்னோ அணி நிலவரம்:


லக்னோ அணி ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை குவித்து வந்தாலும், கடந்த சில போட்டிகளில் அந்த அணி வெற்றி, தோல்விகளை மாறி மாறி பெற்று வருகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் ஒரு டிராவுடன், 13 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. இன்றையை போட்டியில் வெற்றி பெற்றால், லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்திய உத்வேகத்துடன், லக்னோ அணி இன்று களமிறங்குகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதே அந்த அணியின் பலவீனமாக கருதப்படுகிறது. 


மைதானம் எப்படி?


ஏக்னா மைதானம் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே அமைகிறது. கடந்த 3 ஆண்டுகளில் அங்கு மொத்தமாக 30 டி-20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளில் 53% சுழற்பந்துவீச்சாளர்கள் தான் எடுத்துள்ளனர். கடைசியாக அங்கு விளையாடிய 5 லீக் போட்டிகளில் மூன்றில், முதலில் விளையாடிய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும்.


நேருக்கு நேர்?


இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்குநேர் சந்தித்துள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியே வெற்றிபெற்றது.