ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. குறிப்பிட்ட இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முறையே கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.


MI vs DC Match Prediction: 


நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் ஐந்து முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, வார்னர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்கிறது. டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா செயலியில் நேரலையில் காணலாம்.


நடப்பு தொடரில் மும்பை - டெல்லி:


நடப்பு தொடரில் இதுவரை மும்பை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அதேநேரம், டெல்லி அணியோ விளையாடிய 3 லீக் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் வென்று, ஏதேனும் ஒரு அணி நிச்சயம் வெற்றி கணக்கை தொடங்க உள்ளது. அது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


டெல்லி அணி நிலவரம்:


டெல்லி அணியில் பேட்டிங்கில் அனுபவம் மிக்க வீரர்கள் யாரும் பெரிதாக இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கேப்டன் டேவிட் வார்னர் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கான பட்டியலில் இருந்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பிரித்வி ஷா தொடர்ந்து சொதப்பி வருவதும் டெல்லிக்கு தலைவலியாக மாறியுள்ளது. லலித் யாதவ் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. கலீல் அகமது உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டி உள்ளது.


மும்பை அணி நிலவரம்:


மும்பை அணியை பொருத்தவரையில் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தாலுமே, அவர்கள் யாருமே இதுவரை சிறப்பாக செயல்படவில்லை என்பதே உண்மை. சென்னை அணி உடனான தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, தான் உட்பட மூத்த வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது என அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர், தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இளம் வீரர் திலக் வர்மா மும்பை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளார். பந்துவீச்சை பொருத்தவரை பெஹ்ரன்டோர்ஃப், ஆர்ச்சர் போன்ற வீரர்கள் நட்சத்திர வீரர்கள் இருந்தாலும், அவர்களது பந்துவீச்சு பெரிதாக எடுபடவே இல்லை. இன்றைய போட்டியிலாவது அவர்கள் ஜொலிப்பார்களா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


பிட்ச் ரிப்போர்ட்:


மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இது ஹை-ஸ்கோரிங் போட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. போட்டியின் நடுவே சிறிது நேரம் சுழற்பந்துவீச்சிற்கு மைதானம் சாதகமாக இருக்கலாம். முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்சம் 175 ரன்களாவது எடுக்க வேண்டும். டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங் செய்யவே விரும்பும்.


இன்றைய போட்டி கணிப்பு : சேஸிங் பெறும் அணியே வெற்றிபெறும்.


மும்பை உத்தேச அணி:


ரோஹித் சர்மா (கேட்ச்), இஷான் கிஷன் (வி.கே.), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்


டெல்லி உத்தேச அணி:


டேவிட் வார்னர் (கேட்ச்), ப்ரித்வி ஷா, பில் சால்ட் (வி.கே.), மணீஷ் பாண்டே, ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், ஆன்ரிச் நோர்ட்ஜே, கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்