நகத்தை கடிக்கும் அளவுக்கு பரபரப்பும், டிராமாகவும் நிறைந்த போட்டியாக நேற்றைய லக்னோ - பெங்களூரு போட்டி அமைந்த நிலையில், ஏகப்பட்ட வித்யாசமான விஷயங்களும், நிறைய சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. முழுவதும் ஸ்வாரஸ்யங்கள் கொட்டிக் கிடந்த ஆட்டமாக இந்த போட்டி அமைந்துள்ளது. 






தூரமான சிக்ஸர்


மெதுவாக ஆடிக்கொண்டிருந்த ஃபாப் டு பிளஸிஸ் திடீரென விஸ்வரூபம் எடுத்து அடித்த இரண்டாவது சிக்ஸ், மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. 116 மீட்டர்களை தொட்ட அந்த சிக்ஸர் இந்த தொடரின் அதிக தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸராக மாறியது. ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட தொலைதூர சிக்ஸர் பட்டியலில் 16 வருடங்களாக அழிக்க முடியாமல் ஆல்பி மோர்க்கல் பெயர் உள்ளது. 






ஆர்சிபி ரசிகை தந்த மீம் டெம்ப்ளேட்


முக்கியமாக ஆர்சிபி ரசிகை ஒருவர் நெட்டிசன்களுக்கு மற்றொரு மீம் மெட்டீரியலை கொடுத்துள்ளார். லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரான் சிக்ஸர்களை பறக்க விட்டுக்கொண்டிருந்தபோது, ஆர்சிபி ரசிகை ஒருவர் அழுத ரியாக்ஷன் உடனடியாக தீயாய் பரவியது.






முதல் ஹிட்-விக்கெட்


மிகவும் அரிதாகக் காணப்படும் ஹிட் விக்கெட் முறையில் ஆயுஷ் பதோணி அவுட் ஆனது ஆட்டத்தை சூடுபிடிக்க செய்தது. ஸ்டோய்னிஸ் மற்றும் பூரான் அடித்து கிட்டத்தட்ட முடித்திருந்த மேட்சை வெற்றியை நோக்கி கொண்டு சென்று கொண்டிருந்த அவர் வித்யாசமான ஷாட் ஆடி யார்கரை சிக்ஸருக்கு அனுப்ப, அந்த பந்து சிக்ஸ் போவதற்குள் பேட் ஸ்டம்பில் பட்டு பெயில் விழுந்தது. 


தொடர்புடைய செய்திகள்: IPL Points table: பூரான் அடித்த அடி, லக்னோ அபார வெற்றி.. மாற்றம் கண்ட ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிள்






மான்காட் முயற்சி


ஒரு ரன் தேவை என்ற நிலையில், ஒரே ஒரு விக்கெட் கையில் இருந்த நிலையில், கடைசி பந்தை வீச வந்த ஹர்ஷல் படேல், லைனை தாண்டி ஓடிய ரவி பிஷனோயை மான்காட் செய்ய முயல, ஸ்டம்பை அடிக்காமல், கிரீஸை ஹர்ஷல் பட்டேலும் தாண்டிவிட்டதால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அம்பயர் கூற ஆட்டம் உச்சகட்ட பரபரப்பை எட்டியது.


தினேஷ் கார்த்திக் மிஸ்-ஃபீல்டு


இரண்டு பக்கமும் பரபரப்பு இருக்க, தினேஷ் கார்த்திக் பரபரப்பில் செய்த சிறு மிஸ்ஃபீல்டு ஆட்டத்தை லக்னோ பக்கம் கொண்டு செல்ல ஆர்சிபி ரசிகர்கள் துவண்டு போயினர்.






ஆவேஷ் கான் ஆவேசம்


போட்டியை வென்ற களிப்பில் ஆவேசத்தை வெளிப்படுத்திய ஆவேஷ் கானுக்கு ஐபிஎல் கோட் ஆஃப் கான்டாக்டை மீறியதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 'லெவல் 1' தவறு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.






கம்பீர் ஆக்ரோஷம்


இந்த ஒட்டுமொத்த போட்டியில் லக்னோ அணியின் கவுதம் கம்பீரின் ஆக்ரோஷம் பார்ப்போரை அஞ்ச வைத்தது. வென்றதும் கத்திக்கொண்டு மைதானத்திற்கு வந்தது முதல், ஆர்சிபி ரசிகர்களை நோக்கி வாயில் விரல் வைத்து சைகை செய்தது வரை உச்சகட்ட பெருமிதத்துடன் மைதானத்தில் நின்றுகொண்டிருந்தார். அதற்கு முக்கியமான காரணம் நிக்கலஸ் பூரான். ஐபிஎல் தொடர்களில் பெரிய ரெக்கார்ட்ஸ் இல்லாமல் இருக்கும் அவரை பெரும் தொகைக்கு எடுத்ததற்காக அவர் மீது விமர்சனங்கள் இருந்து வந்தது. அனைத்தையும் 19 பந்துகளில் தவிடுபொடியாகியதே பெருமைக்கு காரணம். அவ்வளவுக்கும் பின் ட்ரெஸ்ஸிங் ரூமில் விராட் கோலியை கட்டிப்பிடித்து அன்பைப் பகிரும் புகைப்படம் வெளிவந்து வைரலானது. 


ஓவர்-ரேட் 


த்ரில்லிங்கான மேட்சை நகர்த்தி செல்ல அதிக நேரம் எடுத்துக்கொண்ட டூ பிளஸிஸ் அண்ட் கோ, கடைசி ஓவரில் ஒரு ஃபீல்டரை உள்ளே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிலை ஏற்படாமல் இருந்திருந்தாலும் அனைத்து ஃபீல்டர்களும் உள்ளேதான் நின்றிருப்பார்கள் என்றாலும், பாஃப் டு பிளஸிஸ்-க்கு 12 லட்ச ரூபாய் ஃபைன் போடப்பட்டுள்ளது.