முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளரும் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி, ஐபிஎல்  போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக தனது சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தியதன் மூலம் சஞ்சு சாம்சனின் அனுபவத்தைக் காட்டினார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன்  சஞ்சு சாம்சனின் கேப்டன்ஷிப்பைப் பாராட்டினார்.


தற்போது நடைபெற்று வரும் தொடரில் சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது முறையாக சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. ஏப்ரல் 27, வியாழன் அன்று ராஜஸ்தான் ராயல்ஸ்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியில் முதலிடத்திற்கு முன்னேறியது.


சாம்சன் தனது சுழற்பந்து வீச்சாளர்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினார், ஒரு நல்ல கேப்டனால் மட்டுமே செய்ய முடியும் என்று ரவி சாஸ்திரி சுட்டிக்காட்டினார்.சஞ்சு சாம்சன் ஒரு கேப்டனாக முதிர்ச்சியடைந்துள்ளார். அவர் தனது சுழற்பந்து வீச்சாளர்களை நன்றாக பயன்படுத்துகிறார். ஒரு நல்ல கேப்டன் மட்டுமே மூன்று ஸ்பின்னர்களுடன் விளையாடி அவர்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்த முடியும்" என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ரவி சாஸ்திரி கூறினார்.


இதற்கிடையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் மேலும் கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணியை இரண்டு முறை தோற்கடிப்பது ஐபிஎல்லில் சாதாரண சாதனை அல்ல. சிஎஸ்கேக்கு எதிராக ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக பதான் அவர்களை பாராட்டினார்.


"யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கும், சஞ்சு சாம்சனின் கேப்டன்ஷிப்பும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை புள்ளிப்பட்டியலில்  மேலே கொண்டு சென்றுள்ளது. சாம்சன் அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானவர்" என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பதான் கூறினார்.


சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 77 ரன்களும், துருவ் ஜூரல் 34 ரன்களும் எடுத்திருந்தனர். 



203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே தடுமாற்றம்தான்.  கான்வே  8 ரன்களுடன் நடையை கட்ட தொடர்ந்து பின்னால் 29 பந்துகளில் 47 ரன்கள் அடித்திருந்த ருதுராஜ் ஜாம்பா பந்தில் அவுட்டானார். 


அடுத்ததாக ரஹானே 15 ரன்களுடனும், அம்பத்தி ராயுடுவும் அஷ்வின் வீசிய 11 வது ஓவரில் அவுட்டாகினர். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 


விக்கெட்கள் விழுந்தாலும் உள்ளே வந்த துபே மற்றும் மொயின் அலி, சென்னை அணியை மீட்க வலுவாக களமிறங்கினர். அஷ்வின் வீசிய 14வது ஓவரில் துபே இரண்டு பிரமாண்ட சிக்ஸர்களை பறக்கவிட, ஜாம்பா வீசிய அடுத்த ஓவரிலும் முதல் பந்தும் சிக்ஸர் அடித்து மிரட்டினார். அதே ஓவரில் மொயின் அலி அவுட்டாக, ராஜஸ்தான் அணி பக்கம் காற்றடிக்க தொடங்கியது. 


தொடர்ந்து ஒற்றை ஆளாக கிடைக்கும் பந்துகளை வெளுக்க தொடங்கினார் ஷிவம் துபே. ஜடேஜாவும் தன் பங்கிற்கு 2 பவுண்டரி அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 12 பந்துகளில் 46 ரன்கள் தேவையாக இருந்தது. 19 வது ஓவரில்  9 ரன்கள் மட்டுமே அடித்தனர். கடைசி ஓவரிலும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதன்மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.