ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற உள்ளது.
லக்னோ - பஞ்சாப் அணிகள் மோதல்:
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை, தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
நடப்பு தொடரில் இதுவரை?
நடப்பு தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி, 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், 4 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணியோ தலா 2 வெற்றி மற்றும் தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்ல லக்னோ அணியும், கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டி வருகின்றன.
அணிகளின் நிலவரம்:
லக்னோ அணியில் கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரான், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் பேட்டிங்கில் பலமாக இருக்க, மார்க்-வுட், ரவி பிஷ்னோய் மற்றும் ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் பந்துவீச்சில் பக்கபலமாக உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் லக்னோ அணி சரியான கலவையில் அமைந்துள்ளது. பஞ்சாப் அணியை பொருத்தவரை ஷிகர் தவான், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். ஆனால், இவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது பின்னடைவாக கருதப்படுகிறது.
மைதானம் எப்படி?
பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடப்பு தொடரில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் மைதானம் இருவேறு விதமாக தான் இருந்தது. முதல் பாதியில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் இந்த மைதானம், இரண்டாவது பாதியில் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைகிறது. இதனால், இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.
சிறந்த பேட்ஸ்மேன்:
இன்றைய போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் ஆக லக்னோ அணியின் அதிரடி வீரரான நிகோலஸ் பூரான் கவனம் ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த பந்துவீச்சாளர்:
பந்துவீச்சிலும் லக்னோ அணியின் ரவி பிஷ்னோய் கவனம் ஈர்கக்கூடும். நடப்பு தொடரில் இதுவரை சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்தியுள்ளதோடு, 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
யாருக்கு வெற்றி: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற வாய்ப்பு