LSG Miller: அதுக்குள்ளவா..! இதெல்லாம் ஒரு டீமா? லக்னோவை ரவுண்டு கட்டி பொளக்கும் ரசிகர்கள்..! தோனி லிஸ்டில் மில்லர்
LSG David Miller: ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான அணி நிர்வாகம் லக்னோ தான் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

LSG David Miller: லக்னோ அணி வீரர் டேவிட் மில்லர் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ:
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்று தொடங்க உள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கான மிகப்பெரிய பொழுதுபோக்காக மட்டுமின்றி, பல சர்ச்சைகளையும் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுத்தி வருகிறது. இந்த முறை போட்டிகள் தொடங்காமலேயே சர்ச்சைகள் வெடிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான அணி நிர்வாகம் என்றால் அது லக்னோ தான் என ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம், அந்த அணியின் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட டேவிட் மில்லர் தொடர்பான ஒரு வீடியோ தான்.
வீடியோவில் இருப்பது என்ன?
வைரலாகும் வீடியோவில் டேவிட் மில்லரிடம் ஒருவர் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்புகிறார். முதலாவதாக, 2023 மற்றும் 2014 ஐபிஎல் இறுதிப்போட்டி தோல்விகளில் எது உங்களுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியது எனவும், இரண்டாவதாக உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விகளில் எது உங்களை அதிகம் பாதித்தது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கொந்தளிக்கும் ரசிகர்கள்
டேவிட் மில்லரின் அந்த வீடியோ வெளியானது முதலே ரசிகர்கள் லக்னோ அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த அணி, ஒரு வீரரின் உணர்ச்சிப் போராட்டங்களை லைக்குகளுக்காக பயன்படுத்தி எல்லை மீறிவிட்டது. இது சுரண்டல், பொழுதுபோக்கு அல்ல. வீரரின் நலனுக்கு மரியாதை இல்லை, இதுபோன்ற நடத்தையை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது . மில்லர் கடந்த காலத்தில் உணர்ந்த துக்கம் மற்றும் இழப்பு தொடர்பான உணர்வுகளை பணமாக்கக் கூடாது. ஐபிஎல் வரலாற்றின் மோசமான அணி லக்னோ என ரசிகர்கள் கடுமையான சாடி வருகின்றனர். ஆனாலும், அந்த வீடியோ தற்போது வரை நீக்கப்படவில்லை.
லக்னோ அணி மீது தொடரும் குற்றச்சாட்டுகள்:
- தற்போது லக்னோ அணியின் உரிமையாளராக இருக்கும் கோயங்கா தான், புனே அணியின் உரிமையாளராகவும் இருந்தார். அணியின் முதல் சீசனில் லீக் சுற்றிலேயே வெளியேறியதால், தோனியிடமிருந்து அவர் கேப்டன் பதவியை பறித்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.
- கடந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுலை பொதுவெளியில் திட்டிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த அணியில் இருந்தே கே.எல். ராகுல் விலகினார்.
- அதனை தொடர்ந்து தற்போது டேவிட் மில்லரையும் லக்னோ அணி காயப்படுத்துவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
லக்னோ அணியில் டேவிட் மில்லர்
தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர், மும்பை மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2022 மற்றும் 2024 க்கு இடையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி,முதல் எடிஷனிலேயே கோப்பையையும் கைப்பற்றினார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் ரூ.7.5 கோடிக்கு டேவிட் மில்லரை லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது.