மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 15வது ஐ.பி.எல். திருவிழா சற்றுமுன் தொடங்கியது, முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியின் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவும், கொல்கத்தாவின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் டாசிற்காக மைதானத்திற்குள் வந்தபோது அரங்கமே அதிர்ந்தது.
கொல்கத்தா அணிக்காக பல கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டு முதல் போட்டியிலே கேப்டனாக களமிறங்கியுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதில், ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால் கொல்கத்தா அணி இந்த முறை மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே களமிறங்கி உள்ளது.
வழக்கமாக ஐ.பி.எல். விதிகளின்படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை களமிறக்கி கொள்ளலாம். அனைத்து அணிகளும் நான்கு வெளிநாட்டு வீரர்களுடனே களமிறங்கி வருகின்றன. இந்த நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணிக்காக தான் களமிறங்கிய முதல் போட்டியிலே மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கி உள்ளார்.
கொல்கத்தா அணியில் சாம்பில்லிங்ஸ், ஆந்த்ரே ரஸல் மற்றும் சுனில் நரேன் ஆகிய மூன்று பேர் மட்டுமே இன்று வெளிநாட்டு வீரர்களாக களமிறங்கியுள்ளனர். பிற வீரர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கொல்கத்தாவில் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் அய்யர், அஜிங்கிய ரஹானே, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா, சாம்பில்லிங்ஸ், ஆந்த்ரே ரஸல் ஆகியோர் பேட்டிங்கில் அசத்த காத்துள்ளனர். சுனில் நரேனும் அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன் ஆவார்.
பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவ், ஷிவம் மாவி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். ஷெல்டன் ஜேக்சன் என்ற இந்திய வீரருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரில் இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா கடந்த முறை இறுதிப்போட்டியில் சென்னை அணியிடம் போராடி தோற்றது. இதனால், ஏலத்தில் புதிய வீரர்களுடனும், புதிய கேப்டனுடனும், புதிய உத்வேகத்துடனும் கொல்கத்தா களமிறங்கியுள்ளது.
கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததன் பலனாக சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். டெவோன் கான்வேவும், ராபின் உத்தப்பாவும் களத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்