கே.எல்.ராகுலும், அதியா ஷெட்டியும் இந்த வருட இறுதியில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று தகவல் கிடைத்துள்ளன.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சுனில் ஷெட்டி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், 1992-ம் ஆண்டு வெளியான பல்வான் என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், பயில்வான் படத்தின் மூலம் கன்னடத்திலும், தர்பார் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். ஒரு நடிகராக உலகளவில் அறியப்பட்ட சுனில் ஷெட்டி ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. கிரிக்கெட் ரசிகர் என்று சொல்வதை விட, எல்லை மீறிய கிரிக்கெட் வெறியர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டவர். இவரது மகளும் நடிகையும் ஆன அதியா ஷெட்டியை பல நாட்களாக கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் காதலித்து வருகிறார். இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் இவர்களது திருமணம் நடக்கும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது.
இந்த வருடமே பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்களின் திருமணமாக சூழ்ந்துள்ளது. சமீபத்தில் சென்னை பெண்ணை சென்னையில் திருமணம் முடித்துவிட்டு அணிக்கு திரும்பி வெளுத்து வாங்கி வருகிறார் மேக்ஸ்வெல். சிஎஸ்கே அணியின் ஒரு வார லாங் விடுமுறையில் அணி வீரர் கான்வேயின் திருமணம் காணொளி வாயிலாக அனைத்து சிஎஸ்கே அணி வீரர்களும் கலந்து கொள்ள சிறப்பாக நடந்து முடிந்து வின்டேஜ் வடிவிலான வீடியோவும் வந்திருந்தது. அதுபோல பாலிவுட் பிரபலங்கள், ரன்பீர் கபூர் - ஆலியா பட், கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமணங்கள் இந்த வருடம் கோலாகலமாக நடந்து முடிந்தன. இந்த நிலையில் இந்த வருடமே திருமணம் செய்துகொள்ள போகும் அடுத்த பிரபல ஜோடியாக கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி இருப்பார்கள் என்று தெரிகிறது.
இவர்கள் திருமணம் வின்டர் திருமணமாக இவ்வருட இறுதியில் நடைபெறும் என்று தெரிகிறது. அதுவும் இவர்களது திருமணம் தென்னிந்திய முறையில் நடைபெறுமாம். ஏனெனில் பெண்ணின் தந்தை ஆன நடிகர் சுனில் ஷெட்டி கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதாலும், கே.எல்.ராகுலும் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதாலும் இந்த முடிவை எடித்துள்ளார் என்று செய்திகள் கிடைத்துள்ளன. இந்திய அணியின் அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் வைஸ் கேப்டன் பதவி வகிக்கும் கே.எல்.ராகுல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருவது மட்டுமின்றி செஞ்சுரி ஒன்றை அடித்து பக்கா ஃபார்மில் உள்ளார். ஐபிஎல் முடிந்த சில மாதங்களில் இருபது ஓவர் உலகக்கோப்பையும் வருவதனால் கோப்பைகளை குவித்துவிட்டு குடும்ப வாழ்வில் இணையலாம் என்று முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.