ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
ஐபிஎல் தொடர்:
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராணா தலைமையிலான முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 07.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்கட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் பொதுமக்கள் நேரலையில் காணலாம்.
நடப்பு தொடரில் இதுவரை:
நடப்பு தொடரில் இதுவரை 3 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா, முதல் போட்டியில் தோல்வியை தழுவினாலும் கடைசி 2 போட்டிகளில் வென்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணியோ 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு 9வது இடத்தில் பின்தங்கியுள்ளது. கொல்கத்தா அணி இன்று வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் ஏதேனும் ஒன்றிற்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறக்கூடும்.
வெற்றியை தீர்மானிக்கும் வீரர்கள்:
கொல்கத்தா அணிக்கு குர்ப்ராஸ், ரிங்கு சிங், வெங்கடேஷ் அய்யர், வருண் சக்ரவர்த்தி மற்றும் நரைன் ஆகியோர் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய வீரர்களாக உள்ளனர். இதேபோன்று ஐதராபாத் அணிக்கு ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் மற்றும் மார்க்ரம் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக உள்ளனர்.
நேருக்கு நேர்:
இதுவரை இரண்டு அணிகளும் 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 15 முறையும், ஐதராபாத் அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் கொல்கத்தா அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
முந்தைய வரலாறு:
கொல்கத்தா அணிக்கு எதிராக ஐதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 209
ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 187
கொல்கத்தா அணிக்கு எதிராக ஐதராபாத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 115
ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 101
மைதானம் எப்படி?
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியும், ஹை-ஸ்கோரிங் கேமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் முடிவில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவரை 79 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், 47 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் தான் வெற்றி பெற்றுள்ளன. முதலாவதாக பேட்டிங் செய்த அணிகள் 32 முறை தான் வெற்றி பெற்றுள்ளன.
யாருக்கு வெற்றி வாய்ப்பு: இன்றைய தினம் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.