இங்கிலாந்து அணியின் கேப்டனும், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜோஸ் பட்லர் தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார். இதையடுத்து, ஜோஸ் பட்லர் (Jos buttler) என்ற தனது பெயரை ஜோஷ் பட்லர் (Josh buttler) என்று மாற்றியுள்ளார்.
இந்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில், ஜோஷ் பட்லர் தனது பெயரை ஏன் மாற்ற முடிவு செய்தார் என்பதை விளக்கினார். இதுகுறித்து பட்லர் அந்த வீடியோவில், “ வணக்கம். நான் இங்கிலாந்து டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர். ஆனால் என் வாழ்நாள் முழுவதும், நான் தவறான பெயர் என்று அழைக்கப்படுகிறேன். பலர் என் பெயரை ஜோஷ் என்று தவறாக அழைக்கிறார்கள். இதை நான் கடந்த 33 வருடங்களாக அனுபவித்து வருகிறேன். எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எனது பெயரை ஜோஷ் பட்லர் என அதிகாரப்பூர்வமாக மாற்றிக்கொண்டேன்.
தெருவில் இருப்பவர்கள் முதல் வீட்டில் உள்ள என் அம்மா வரை என் பெயரை தவறாக அழைக்கிறார்கள். என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் போது கூட அம்மா என் பெயரை தவறாக எழுதிவிட்டார்கள். நான் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக எனது இங்கிலாந்து நாட்டிற்காக விளையாடி வருகிறேன். மேலும், ஒரு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியிலும், ஒரு டி20 உலகக் கோப்பையை என் தலைமையிலான இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது. இருப்பினும், எனது பெயரை இன்றும் பலரும் தவறாகவே கூறிவருகின்றனர்.
எனவே, இந்த விவகாரங்களை மனதில் வைத்து, இப்போது எனது பெயரை மாற்றிக்கொண்டேன். இனிமேல் எனது பெயர் ஜோஷ் பட்லர்.” என்று தெரிவித்தார்.
ஜோஷ் பட்லர்:
கடந்த ஐபிஎல் 2022ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி ஆரஞ்சு கேப்பை வென்றார் ஜோஷ் பட்லர். அந்த சீசனில் அவர் 4 அரைசதங்கள் மற்றும் நான்கு சதங்களுடன் 863 ரன்கள் குவித்தார். இருப்பினும், இந்த ஐபிஎல் 2024ல் இதுவரை ஜோஷ் பட்லருக்கு சிறப்பாக இல்லை. கடைசியாக விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜோஷ் பட்லர் 9 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்த போட்டிக்கு முன்னதாக, பட்லர் டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக 16 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். அன்றைய போட்டியில் அவரால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.
ஜோஷ் பட்லர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 57 டெஸ்ட், 181 ஒருநாள் மற்றும் 114 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்குகிறார் ஜோஷ் பட்லர்.