Rohit Sharma: கேப்டன் பாண்ட்யாவிற்கு எதிராக மும்பை அணி ரசிகர்களே முழக்கம் எழுப்பும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பண்ட்யாவிற்கு எதிராக முழக்கம்:


ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் போட இரு அணி கேப்டன்களும் களத்திற்கு வந்தபோது, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கு எதிராக ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பினர். மைதானமே அதிரும் அளவிற்கு ரசிகர்கள்  ஒலி எழுப்பினர். ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, பாண்டாவை கேப்டனாக்கியது முதலே ரசிகர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


ரசிகர்களை சமாதானப்படுத்திய ரோகித்:


போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யும்போது, ரோகித் சர்மா பவுண்டரி எல்லை அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, ரசிகர்கள் மீண்டும் ஹர்திக் பாண்ட்யாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனை கண்டதும் ரோகித் சர்மா ரசிகர்களை பார்த்து, அமைதியாகுங்கள். சத்தம் எழுப்ப வேண்டாம் என சைகைகள் மூலம் வலியுறுத்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.






மவுனம் கலைப்பாரா ரோகித்?


11 ஆண்டுகள் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை முறையான அறிவிப்பு எதுவுமின்றி நீக்கிவிட்டு, குஜராத் அணியில் இருந்து மீண்டும் மும்பை அணிக்கு வந்த ஹர்திக் பாண்ட்யாவை அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே ஹர்திக் பாண்ட்யா மீது விமர்சனங்கள் குவிகின்றன். மைதானங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமின்றி, எல்லைகளை கடந்து ஹர்திக் பாண்ட்யாவின் மனைவியயும் சிலர் சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சித்து இருந்தனர். இந்த பிரச்னை முடிவுக்கு வர ரோகித் சர்மா மவுனம் கலைக்க வேண்டும், ரசிகர்களை அமைதிப்படுத்தும் விதமாக வெளிப்படையாக பேச வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






ஹர்திக் பாண்ட்யா மீதான விமர்சனம்:


தனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்த மும்பை அணியில் இருந்து, கேப்டன் பதவிக்காக குஜராத் அணிக்கு சென்றவர் ஹர்திக் பாண்ட்யா. ஆனால், வெறும் கூடுதல் பணம் மற்றும் பதவிக்காக, குஜராத் அணியில் இருந்து மீண்டும் மும்பை அணிக்காக தாவியுள்ளார். இதனால், பாண்ட்யா கிரிக்கெட் விளையாட்டிற்கு உண்மையாக இருக்காமல், வெறும் பணம், பதவி மற்றும் புகழுக்காக விலைபோகிறார் என ரசிகர்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும், தன்னை கூல் கேப்டன் என காட்டிக்கொள்ளும் விதமான செயல்பாடுகளில் அவர் ஈடுபடுவதாகவும், ஆனால் உண்மையில் அந்தளவிற்கு திறமையான கேப்டனாக பாண்ட்யா மேம்படவில்லை என்றும் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.